கரமிழந்த கடவுள்
245
புராண இதிகாசாதிகளிலே, உள்ள வருணனைக்கு ஈடாகக் குவலயத்திலே வேறு உண்டோ! விரிசடைக் கடவுள் திரிபுரமெரித்த காதையும், வேலேந்தி சூரனைக் கொன்ற காதையும், மராமரம் துளைத்த காகுத்தன் இலங்கையை அழித்த காதையும், எத்துணை வீரச்சுவை சொட்டும் காவியக் கனிகள் என்பதை அறிவாயோ! நாடு பலப்பல உண்டு! ஏடுகள் ஏராளம்! எனினும், எந்த ஒரு ஏட்டிலேனும் காட்டமுடியுமோ, தேவாசுர யுத்தம் போன்றதோர் பெரும் போராட்ட வருணனையை, என்று கேட்பர், விழிகளை உருட்டியபடி—அவர்தம் ஆர்ப்பரிப்பு கேட்டு பாமரரும் நம்புகின்றனர், நவரசம் ததும்பும் புராணக் கதைகளை, இங்குமட்டுமே கட்டினர், காவியக்காரர்கள்—பிற நாட்டாருக்கு அந்தத் திறமை இருந்ததில்லை, என்று எண்ணி ஏமாறுகின்றனர்.
கடவுள்களுக்கும் அசுரர்களுக்கும் மூண்ட போர்களும் கடவுள்களுக்குள்ளாகவே மூண்ட போர்களும் பழைய கடவுளுக்கும் புதிய கடவுளுக்கும் எழுந்த போர்களும், இங்குபோல, அங்கெலாமும் ஆதிநாட்களிலே கதைகளாகக் கூறப்பட்டு, நம்பப்பட்டுத்தான் இருந்தன. சில, இங்குள்ள புராணங்களை போட்டியிலே வெல்லுமளவுக்குப் பொய்யும் புனைசுருட்டும் நிரம்பியவை!
கடவுள்—மனம், வாக்கு, காயம் என்பவைகளுக்கு அப்பாற்பட்டது என்ற தெளிவு தோன்றாமுன்னம், பல கடவுள்கள் உண்டு என மக்கள் எண்ணிய நாட்களிலே, கடவுள்களுக்குள்ளாகச் சமர் நடந்ததாகக் கதை கட்டிவிடுவது எளிதான காரியந்தானே! பிரிட்டனிலும், அயர்லாந்திலும், ட்ரூயிட் பூஜாரிக் கூட்டம் ஆதிக்கம் செலுத்தி வந்த நாட்களிலே இவ்விதமான கதைகள், ஏராளமாக உலவி வந்தன!