உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

மாஜி கடவுள்கள்


பீடமாய், பூஜாரிகளின் குகைகளாய் இருந்த கேடு நீங்கி கடவுள் தூய்மையின் இருப்பிடம், அவர் ஒருவர், உருவமற்றவர், உன்னதத்தின் பிறப்பிடம் என்ற உண்மைக் கடவுட் கொள்கையுடன் மக்கள் வாழுகிறார்கள். நமக்கு இன்றும் இருப்பதுபோன்ற மாரியும் மன்மதனும், காட்டேரியும் காகவாகனனும், வாயுவும் வருணனும், அவர்களுக்கும் இருந்தன. நமக்கு இருக்கும் புராண இதிகாசங்கள் போல அவர்களிடமும் இருந்தன. நமது கடவுளர் கதைகளிலே காமலீலைகள் வர்ணிக்கப்படுவதுபோல அவர்களிடமும் இருந்தன. இன்று அவைகளை, அஞ்ஞானிகளின் விளையாட்டு என்று அந்த நாட்டு மக்கள் ஒதுக்கிவிட்டனர்; அவர்கள் வாழ்கிறார்கள்; நாமோ இன்னமும் அடிமைகளாய், வறுமையின் பிடியில் சிக்கி வதைகிறோம்; மாஜிகளான கடவுளரின் முழு விபரமும் தருவது முடியாத காரியம்—தேவையுமில்லை. பல ராஜ்யங்களின் ரட்சகர்களென்று கருதப்பட்டு, காவிய கர்த்தாக்களால் புகழப்பட்ட, ஒரு சில மாஜிகளை மட்டுமே இங்குக் குறிப்பிடுகிறேன் உலகின் போக்கு உங்கட்குத் தெரியட்டும் என்ற எண்ணத்துடன். இதோ “மாஜிகள்” பாருங்கள்;

அப்பாலோ (Apollo)

கிரேக்கர்களின் முக்கியத்துவம் வாய்ந்த கடவுள்களில் ஒருவர். இங்குச் சூரியபகவான்போல, அங்கு அப்பாலோ கருதப்பட்டு மக்கள் அவருக்குத் தொழுகை நடத்தி வந்தனர்.

அபாடான் (Aphadon)

நரகலோகக் காவலன், ஆண்டவனின் முத்திரை மோதிரத்தின் குறி, வருகிறவர்களின் முகத்திலே இருக்கிறதா என்று பார்ப்பான். இல்லை என்றால், அவர்களைப் படுபாதானத்தில் தள்ளி இம்சைக்கு ஆளாக்குவான்.