கரமிழந்த கடவுள்
253
டனிலே, ஒரு காலத்திலே ஓங்காரச் சொரூபங்களாய் கருதப்பட்டு வந்தவைகள், மாஜி கடவுள்களாகிவிட்டதைக் கண்டபிறகாவது, கருத்திலே தெளிவு தோன்றலாகாதா!! உலகிலே வேறு எவருக்குமே தோன்றாத கற்பனை அலங்காரங்கள் இங்குதான் உதித்தன என்று எண்ணிக் கொண்டு, அந்தக் கற்பனைகள் காலத்தின் தாக்குதலால் புழுத்துப் போயினும், கைவிட மறுக்கும் கருத்துக் குருடர்களல்லவா இங்கு மதவாதிகளாக உள்ளனர். சில நாடுகளிலே, இந்த நாட்டிலே தீட்டப்பட்டதைவிட விந்தையான கடவுட் கதைகள் தீட்டப்பட்டு பாமரரால் திரு அருளைக் கூட்டுவிக்கும் புண்ய ஏடுகள் என்று போற்றப்பட்டுத்தான் வந்தன—எனினும் தெளிவு, தேங்கிக்கிடந்த மன மாசுகளை அப்புறப்படுத்திற்று, அவர்களெல்லாம் வாழலாயினர்.
இங்குள்ள புராணங்கள், தேவாசுர யுத்தம் அல்லது தேவர்களுக்குள்ளாகப் போர் என்ற அளவுடன் நின்றுவிட்டன. அயர்லாந்து இதைவிட ஒருபடி மேலால் சென்று, தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் போர் நடந்ததாகவும் அந்தப் போரிலே மனிதர் வென்றதாகவும், கடவுள்கள் தம் ராஜ்யத்தை இழந்து, ‘கண்காணாச் சீமை’ சென்றதாகவும்கூடப் புராணம் தீட்டியிருக்கிறது.
லக் முதலாய கடவுளர், கடலகக் கடவுளரை வென்று தமது ஆதிக்கத்தை பிரிட்டனில் மட்டுமல்லாமல் அயர்லாந்திலும் பரப்பிப் பரிபாலனம் செய்து வந்தனர். கடவுளர் என்றால், இதுதானே முறை, வெற்றி அவர்கட்குத்தானே, அவர்களை வீழ்த்தக்கூடிய வல்லமை வேறு எவருக்கு உண்டாக முடியும் என்று சராசரி பக்தர் கூறுவர். அயர்லாந்திலே நடந்ததாகக் கூறப்படும் கற்பனையோ, இதற்கு நேர்மாறானது.