உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாஜி கடவுள்கள்

13


இயோலஸ் (Aeolos)

கிரேக்க நாட்டவருக்கு இயோலஸ், வாயுபகவான். இவர் நல்ல காற்று, கெட்ட காற்று என்று பிரித்துத் தோல் பைகளில் அடைத்துத் தருவார். அதன்படி பலாபலன்கள் இருக்கும்.

அப்ரோடைட் (Aphrodite)

கிரேக்க நாட்டு அழகுத்தெய்வம். இந்தத் தெய்வத்தின் அருளால் அழகு வரும் என்பது கிரேக்கரின் நம்பிக்கை. அப்ரோடைட் க்யூபிட் என்னும் கடவுளுக்குத் தாய். க்யூபிட், கிரேக்க நாட்டு மன்மதன். காதற் கணைகளை ஏவும் தெய்வம். இந்த அப்ரோடைட் என்ற அழகுத்தெய்வத்திடம் காதல் கொண்டு சேஷ்டைசெய்து, அவமானமடைந்த கடவுள் ஒன்று உண்டு. அந்தக் கடவுள் பெயர் ஆரிஸ்.

ஆரிஸ் (Aris)

கிரேக்கர்கள், யுத்த தேவதையாக ஆரிஸ் என்னும் கடவுளைக் கும்பிட்டு வந்தார்கள். இந்தக் கடவுளுக்குச் சண்டையிலே மிகுந்த பிரியம். ஆரிஸ் ஒரு சமயத்திலே அப்ரோடைட் என்ற அழகுத் தெய்வத்திடம் ஆசைகொண்டு சேஷ்டை செய்ய, அதனை மற்றக் கடவுள்கள் கண்டுபிடித்துக் கேலிசெய்து, ஆரிசை அவமானப்படுத்திவிட்டார்கள்.

ஆர்ட்டிமிஸ் (Artimes)

அப்பாலோ போலவே ஆர்ட்டிமிஸ் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கடவுள், கிரேக்கருக்கு. ஆர்ட்டிமிஸ் கன்னி! கால் நடைகளின் ரட்சிப்பு வேலை ஆர்ட்டிமிசுக்கு.