மாஜி கடவுள்கள்
15
பிராகி (Bragi)
நார்வே நாட்டில், கவிதைக்குக் கடவுள், பிராகி. ஓடினுக்கும் பிரிகாவிற்கும் பிறந்தவர். நீண்ட வெண்தாடியுள்ள கிழ உருவில் இக்கடவுள் இருந்துகொண்டு, போர்க் காலத்தில் உயிர்நீத்தவர்களை, சொர்க்கத்திலே வரவேற்கிறார் என்பது அந்நாட்டு மக்கள் கொண்ட நம்பிக்கை.
கிளைடை (Clydy)
அப்பாலோ என்ற கடவுளைக் காதலித்த கிளைடையும் ஒரு கடவுளே. அப்பாலோ, கைவிட்டுவிடவே, கிளைடை உருகிப்போனதுடன், கடைசியில் சூரியகாந்திப் பூவாக உருமாறிவிட்டதாகக் கதை உண்டு.
லக் (Luck)
அயர்லாந்திலே, லக் என்ற கடவுளை மக்கள் வணங்கினர். லக் அந்த நாட்டுச் சூரியதேவன்.
க்யூபிட் (Cupid)
ரோம் நாட்டுக்கு மன்மதன் க்யூபிட், காதற் கணைகளைச் செலுத்துவது இந்தக் கடவுளின் வேலை. குழந்தை உருவில் கையில் வில் அம்புடன், கண்கள் துணியால் மூடிக் கட்டப்பட்டு இருக்கும் விதத்திலே க்யூபிட் எனும் கடவுளை ரோம் நாட்டவர் சித்தரித்தனர்.
சிபிலி (Cybele)
வட ஆசியாவிலே, சிபிலி என்றோர் கடவுளை, அமோகமான ஆடல்பாடல்களுடன், மக்கள் வழிபட்டுவந்தனர், கோலாகலமான பூஜை நடத்துவர், குடித்துக் கூத்தாடுவர், இந்தக் கடவுளை மகிழ்விக்க. சிபிலி, இயற்கை எழிலுக்குக் கடவுள் என்பது அந்த மக்கள் எண்ணம்.