16
மாஜி கடவுள்கள்
டயானா (Diana)
ரோம் நாட்டவர், டயானா என்ற கடவுள் ஒளி தருபவன் என்று வணங்கினர். அதாவது சந்திரன் இங்கு ஆண், அங்குப் பெண்கடவுள். அதிலும் கன்னி, சதாசர்வ காலமும் தோழிகளுடன் சேர்ந்துகொண்டு உல்லாசமாக வேட்டையாடுவது டயானாவுக்கு விருப்பம். எபீசஸ் என்ற இடத்திலே டயானாவுக்குக் கட்டப்பட்ட கோயில் உலக அதிசயங்களிலே ஒன்று.
டயனீஷியா (Dionysia)
பேகஸ் போலவே குடிவகைகளுக்குத் தெய்வமாக டயனீஷியா எனும் கடவுளைக் கிரேக்கர்கள் கொண்டாடி வந்தனர். பேகன், ரோம் நாட்டவருக்கு. டயனீஷியா, கிரேக்கருக்கு. இந்தக் கடவுள் பூஜை, வெறிக்கக் குடித்துவிட்டுக் கூத்தாடுவதுதான். டயனீஷியாவின் பிறப்பு வேடிக்கையான ஒரு கதை. கர்ப்பமாக இருக்கும்போதே தாய் இறந்துபோகவே, தாயின் கருப்பையிலிருந்து டயனீஷியா வெளியே எடுக்கப்பட்டு, பிறகு ஜூவஸ் எனும் கடவுள் தன் தொடையிலேயே வைத்திருந்து, வளர்த்தாராம்.
மூன்று சகோதரிகள் (Three Sisters)
விதியை, இங்கே பிரம்மா எழுதுகிறார் என்றல்லவா கதை. கிரேக்க நாட்டிலே, “விதி” நெய்து, துண்டுகளாக அறுத்து எடுக்கப்படுகிறது. இந்தக் காரியத்துக்கு மூன்று கடவுள்கள் மும்முரமாக வேலை செய்த வண்ணம் உள்ளனர். மூவரும் பெண்கள். Clotho க்ளோத்தோ, Larchesis லர்ச்சீசிஸ், Atropos அட்ரோபாஸ் என்பது அவர்கள் பெயர். ஒரு கடவுள் நூற்க, மற்றோர் கடவுள் நெய்ய, மூன்றாம் கடவுள், துண்டுகளாக வெட்டி எடுத்து வீச இவ்விதமாக, மக்களின் வாழ்வு மேலே நெய்து அனுப்பப்படுகிறது