18
மாஜி கடவுள்கள்
காத் (Gad)
அதிர்ஷ்ட தேவதை என்று பாபிலோனிய மக்கள் காத் என்ற ஒரு கடவுளை, வணங்கி வந்தனர்.
டிமிடர் (Dameter)
பூலோகத்திலும், மேல் உலகிலும் உள்ள சகல ஜீவராசிகளுக்கும், மாதாவாக, டிமிடர் என்ற ஒரு கடவுளைக் கிரேக்கர்கள் கொண்டாடி வணங்கி வந்தனர்.
கனிமீடிஸ் (Ganymedes)
கிரேக்கக் கடவுளான ஜுவஸ், பூலோகவாசியான கனிமீடிஸ் என்ற அழகான வாலிபனைக் கண்டு, அவனிடம் மையல் கொண்டு அவனைக் கடவுளாக்கி தன் பக்கத்திலேயே இருக்கும்படிச் செய்துவிட, கனிமீடிஸ் கடவுளாகி, ஜூவஸ் என்ற கடவுளுக்குப் பானம் ஊற்றித்தரும் பணியை மேற்கொண்டு வரலானான்.
ஹாதார் (Hathar)
தேவலோக ராணியாக ஹாதார் என்ற கடவுளை ஈஜிப்ட் நாட்டவர் வழிபட்டு வந்தனர்.
ஹிபி (Hepe)
கிரேக்கக் கடவுள் ஜூவசுக்கு மகள் ஹிபி, அழகி. ஹிபியும் ஒரு கடவுளாகவே வணங்கப்பட்டு வந்தாள். கிரேக்கவீரன் ஹெர்முலின் இறந்து மோட்சலோகம் வந்ததும் ஹிபியை மணம் செய்துகொண்டான்.
ஹிகேட் (Hecate)
பூலோகம், தேவலோகம், நரகலோகம் ஆகிய மூன்று இடங்களிலும் அதிகாரம் செலுத்தி, எண்ணற்ற பிசாசுகளை ஏவலராகப்பெற்று, மூன்று தலைகளுடன் விளங்கிய, பராக்கிரமக் கடவுளாக, கிரேக்கர்கள் ஹிகேட் என்னும் தெய்வத்தைத் தொழுது வந்தனர்.