உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாஜி கடவுள்கள்

19


ஹெயிம்ட்லர் (Heimdler)

நார்வே நாட்டுக் கடவுளரில் ஒருவர். தேவலோக வாசற்காவல் இக்கடவுளின் வேலை. அங்கு வானவில்தான் பாலமாக அமைந்திருக்கிறது. ஹெயிம்ட்லர் ஒளிதரும் கடவுள். புல்முளைக்கும்போது உண்டாகும் சத்தம்கூட இந்தக் கடவுளின் காதிலே விழுமாம். ஹெயிம்ட்லர் எனும் கடவுளுக்கும், லோகி என்னும் கேடுசெய்யும் கடவுளுக்கும் அடிக்கடி போர் நடக்குமாம். கடைசியில், ஒருவரை ஒருவர் கொன்று கொண்டனர். இரண்டு கடவுள்களும் இறந்தனர்.

ஹெல் (Hel)

நார்வே நாட்டுத் தேவதை கேடுசெய்யும் லோகி என்னும் கடவுளின் குமாரியான ஹெல், மரணத்துக்கு அதிபதி.

ஹீரா (Hera)

கிரேக்கக் கடவுளான ஜூவசுக்கு, ஹீரா தங்கை. தங்கையையே ஜூவஸ் கல்யாணம் செய்துகொண்டார். ஜூவசுக்கு மானிடர்மீது இருந்து வந்த அன்பு, ஹீராவுக்குப் பொறாமையையும் கோபத்தையும் ஊட்டவே, ஜூவசின் குழந்தைகளை, ஹீரா, கொடுமை செய்தாள்.

ஹெர்மீஸ் (Hermes)

நம்நாட்டு நாரதர்போல கிரேக்கர்களுக்கு, ஹெர்மீஸ். ஜூவஸ் என்ற கடவுளுக்கு மாயா என்ற தேவதை மூலம் பிறந்த ஹெர்மீஸ் என்ற கடவுள், தேவர்களுக்குத் தூதனாகவும், தந்திரமிக்கக் கடவுளாகவும் இருந்து வந்தான், என்று கிரேக்கக் கதை இருக்கிறது. இறக்கைகொண்ட தலையணியும் செருப்பும் தரித்துக்கொண்டிருப்பதாகக் கூறுவர்.