உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

மாஜி கடவுள்கள்


தன் சகோதர சகோதரிகளின் துணையுடன், தகப்பனுக்கு எதிரிடையாகப் புரட்சி நடத்தி, அதிகாரத்தைக் கைப்பற்றி, சகோதரர்களுக்கு சில லோகங்களையும் அதிகாரங்களையும் பங்கிட்டுக் கொடுத்து, தன் தங்கையைத் தானே மணம் செய்துகொண்டு, உலகை ரட்சித்து வருகிறார் என்பது கிரேக்கரின் கடவுட் கொள்கை.

இன்னும் எண்ணற்ற கடவுள்கள், கோயில் கொண்டு எழுந்தருளியிருந்த நாடுகளிலே, இன்று, நிலைமை அடியோடு மாறிவிட்டது. காளிதாசன், கம்பன், போன்ற கவிவாணர்களால் போற்றிப் புகழப்பட்ட அந்தக் கடவுள்களெல்லாம், இன்று மாஜிகள்! இன்றும் நம் நாட்டிலே, நம்மவர்கள் நம்புகிறார்களே, அதுபோலவே அந்தக் காலத்திலே அந்த நாடுகளிலெல்லாம் இன்று மாஜிகளாகிவிட்ட கடவுள்களிடம், பலவகையான அஸ்திரங்கள் உண்டு என்றும், அற்புதம் புரிவதிலே அபாரமான திறமை உண்டென்றும் மக்கள் நம்பினர், அந்த நம்பிக்கையை நாட்டிலே பரப்பவும் பலப்படுத்தவும் பல புராணங்கள் இருந்தன. அந்தப் புராணங்கள் புண்ய கதைகளென்று போற்றப்பட்டு வந்தன. அவ்வளவும் இன்று அங்கு பழங்கதைகளாகிவிட்டன. மதம் வேறு, மக்களின் மனதிலே மாசுபடிந்திருந்தபோது, கட்டிவிடப்பட்ட இந்தக் கதைகள் வேறு என்பதை மதிவாணர்கள் தைரியமாக எடுத்துக்கூறினர். மருண்ட மக்கள் செய்த கொடுமைகளைச் சகித்துக்கொண்டனர். புராணீகன் தேவ அம்சம் பெற்றவன், புராணப் புலவன் அருட்களி, பூஜாரி தேவதூதன் அவர்களைக் குறைகூறுவது கொடிய பாவம் என்றுதான், அங்கெல்லாம் மக்கள் முன்பு நம்பினர். யாராவது தைரியமாக, இவைகளைக் கண்டிக்க முன்வந்தால், ஆத்திரம் கொண்டு அவர்களை அடித்தனர், இம்சித்தனர், கொளுத்தினர், சித்திரவதை செய்தனர். இவ்வளவு கொடுமைகளையும்