உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாஜி கடவுள்கள்

23


சகித்துக்கொண்டவர்களின், தொண்டின் பயனாகவே அங்கு அறிவாலயங்கள் ஆயிரமாயிரமாகி, மக்கள் முன்னேற முடிந்தது. ஒரு காலத்திலே, ஓங்கார சொரூபங்களாக விளங்கிய ஆயிரக்கணக்கான கடவுள்கள், இன்று மாஜிகளாயினர்.

பலகாலமாக மக்கள், பயபக்தியோடு தொழுது வரும் தெய்வங்களைப் பேய் என்று கூறுவது, சுலபமான வேலை அல்ல, எல்லோரும் செய்யக்கூடிய வேலையுமல்ல, அதற்கு இருக்கவேண்டிய நெஞ்சு உரமே வேறுவிதமானது. அறியாமை என்னும் முரட்டுக் குதிரைமீது ஏறிக்கொண்டு, கொடுமை எனும் வேல் பிடித்துக்கொண்டு, கூட்டம் கூட்டமாக, மக்கள் பாய்ந்து வருவர். கடவுளை நிந்திக்கிறான் கயவன், இவனைக் கொன்று, உடலை காக்கை கழுகுக்கு இரையாக்குகிறோம் என்று கூவுவர், இந்தப் பயங்கரமான சூழ்நிலையிலே இருந்து கொண்டு, எதுவரினும் வருக என்ற நிலையில் பாடுபட்டனர், சில புரட்சி வீரர்கள். ஒரு பிரபுவின் ஆதிக்கத்தை, ஒரு அரசனின் ஆதிக்கத்தை எதிர்த்து புரட்சி நடத்துவது என்றாலே உயிர்போகும். மக்கள் மனதிலே நெடுநாட்களாக குடிகொண்டுள்ள, எண்ணற்ற தெய்வங்களை, அவைகளைப்பற்றிக் கட்டிவிடப்பட்ட கதைகளை, அந்தக் கதைகளுக்கேற்றபடி நடைபெற்று வரும் திருவிழாக்களை, சடங்குகளை, அவைகளால் பிழைத்துவரும் பூஜாரிக் கூட்டத்தை எதிர்த்துப் பணிபுரிவதென்றால், சாமான்யமான காரியமல்ல. வாழ்விலே பற்று அற்றால் மட்டுமே, அந்தப் பணிபுரியமுடியும்.

புத்தறிவு பரப்புவதற்கு நடத்தப்படவேண்டிய போர், பலம் பொருந்தியதோர் கோட்டைக்குள் இருக்கும், மாயாவாதியை, வெளியே, வெட்ட வெளியில் நின்றுகொண்டு, எதிர்க்கும் ஆபத்தான காரியம் போன்றது. கோட்டைக்குள்ளே காவல் இருக்கும், ஆட்பலத்துடன் ஆயுத பல-