40
மாஜி கடவுள்கள்
சமும் ஆவலுமே, இவ்விதமான கற்பனைகள் முளைக்க இடமளித்தது. இயற்கையின் கோலாகலத்துக்கு விளக்கம் கிடைக்காதபோது, பிரபஞ்ச உற்பத்திக்கு காரணம் விளங்காதபோது பாமரர் பலவிதமான, கற்பனைகளைக் காரணமாகக் கொள்ளத் தொடங்கினர். ஒலியும் ஒளியும் அவர்களுக்கு, பயத்தை மூட்டிற்று! புயலும் மழையும் அவர்களுக்குப் பீதியைத் தந்தன! உயரமான மலைகளும், விரிந்து பரந்து கிடந்த கடலும் அவர்களுக்கு ஆச்சரிய மூட்டின. இந்த அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டு, பல கடவுள்கள், விண்ணில் இருந்து தீரவேண்டும் என்ற எண்ணம் உதித்தது—பயம் பிறந்தது—பக்தி உதித்தது—கடவுள்களைச் சாந்தப்படுத்த வேண்டும், சந்தோஷப்படுத்த வேண்டும், உதவி பெறவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. பூஜாரிகளாயினர் தந்திரமிக்கோர், மக்களின் அச்சத்தையும் ஆவலையும் அடிப்படையாக்க கொண்டு, கற்பனைக் கதைகளைக் கோத்தனர், புலவர்கள்; பூஜாரிகள், இவைகளைப் புண்ய கதைகளாக்கினர்; கோயில்கள் கட்டப்பட்டன; கூட்டம் கூட்டமாகக் கடவுள்கள் அமைக்கப்பட்டனர்.
இந்த அஞ்ஞானம் தொலையவும் மெய்ஞானம் பிறக்கவும், பகுத்தறிவாளர்கள் பட்டபாடு கொஞ்சமல்ல.
இப்படி எல்லாம் இருக்கமுடியுமா, என்ற எண்ணம் தோன்றியபோதே, பயத்தால் நடுங்கிப் போனவர்கள், எவ்வளவு பேரோ! மெல்லிய குரலில் மெத்த வேண்டியவர்கள் என்று நம்பிக்கொண்டு, சிலரிடம் கூறி, அவர்களாலேயே, பித்தன் என்றும் பேய்ச்சித்தன் என்றும் பழிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர்களோ! காட்டிக் கொடுக்கப்பட்டவர்கள், எத்துணை பேர்களோ! துணிந்து, பலரறியத் தமது சந்தேகத்தைக் கூறி, எதிர்ப்புணர்ச்சி-