vi
பின்னர் அவர் கொள்கையைப் பலர் சிந்தித்தனர். சிலர் வாதிட்டனர். அதன் பலன், ஒருகாலத்தில் கோலாகலமாக வீற்றிருந்த பல கடவுள்களும் மாஜிகளாக்கப்பட்டு, காட்சிச்சாலைக்கு அனுப்பப்பட்டன. புராணப் புளுகுகள் புண்ணிய கதைகள் அல்ல என்ற உண்மை தெளிவாயிற்று. “இறைவன் ஒருவன், அவன் உருவமற்றவன், அவன் அருள் பெறப் பொய்மை நிறைந்த பூசாரிகளின் தரகு தேவையில்லை, தூய்மையும் நல்லொழுக்கமுமே போதும்” என்ற அறிவு மலர்ந்தது அங்கே.
நம் நாட்டிலும் கடவுளர் கதைகளின் ஆபாசப் போக்கினைக் கண்டு சிந்தித்து மக்களுக்கு எடுத்துக் கூறிய அறிஞர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றினர்.
“நட்டகல்லைத் தெய்வமென்று
நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணென்று
சொல்லுமந் திரமேதடா
நட்டகல்லும் பேசுமோ
நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம்
கறிச்சுவை யறியுமோ?”
என்ற பகுத்தறிவுப் பாடல் எழுந்தது ஆனாலும் அந்த உயர்ந்த நெறியைப் பரவவிடவில்லை இந்த நாட்டுச் சுயநலவாதிகள். இந்நாட்டு மக்களுக்குப் புராணபோதை நன்கு ஊட்டப்பட்டது. இலக்கியம், சமயம், சாத்திரம், பழக்கவழக்கம் என்ற போர்வையில் அந்தக் கேடு நிறைந்த பழமை பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையை மாற்றி மக்களின் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்க, அரசியல், பேச்சு, எழுத்து, நாடகம், சினிமா என்ற பல்வேறு துறைகளிலும் பணிபுரிகின்றார் அண்ணா.