உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹீரா தேவி

47


கண் மூடிக்கிடக்கும்! மற்றக் கண்கள் திறந்து இருக்கும்; எனவே இந்தப் பலகண் தேவன், எதையும், பார்த்துக் கொண்டே இருப்பான்! அயோ, தப்ப முடியவில்லை—ஜுவஸ், நெருங்க முடியவில்லை! ஹீராவின் திட்டம் வெற்றி தந்தது! தேவன், வேதனையுற்றான்! கடவுள்தான், எனினும் காதல் பாருங்கள்! இலேசானதா, அந்தச் சக்தி!

அருமை மகள் அயோவை இழந்த இனாகஸ், தவியாய்த் தவித்தான்—எங்கெங்கு தேடியும் அவள் கிடைக்காததால், ஏக்கமுற்றான். அலைந்தான், மகளைத்தேடி! பசுவாகி, அவள் மேய்ந்துகொண்டிருந்த இடம் வந்தான்—மகளைக் காணோமே என்று பதைத்தபடி! பசுவைப் பார்த்தான்—பார்த்து? அவன் மகளை அல்லவா தேடுகிறான்! மகள்தான் அந்தப் பசு என்பதை அவன் கண்டானா! அயோவுக்குத் தெரிந்துவிட்டது, தன் தகப்பன் வந்திருப்பது. “அப்பா! இதோ நான் இருக்கிறேன்” என்று கூறமுடியவில்லை—எனவே, கால் குளம்பினால், தரையிலே, அயோ என்று கீறிக் காட்டிற்றாம் பசு!

“என்ன அண்டப்புளுகய்யா இது—பசுவாக மாறிடுவதாம்—அதேபோது வந்திருப்பது தகப்பன் என்று தெரிவதாம்—அவ்வளவு அற்புத சக்தி இருந்தும், பேச மட்டும் முடியாதாம்—ஆனால் எழுதத் தெரிகிறதாம்! இதெல்லாம், என்ன புளுகுமூட்டை! இப்படிப்பட்ட புளுகுகளையா, புனிதனைப்பற்றி மக்கள் பூஜிப்பதற்காக என்றுகூறிப் புனைவது!” என்று இன்று, நம் நாட்டவர் கூடக் கூறுவர்—நல்லறிவு அந்த அளவுக்குப் பரவிவிட்டது. ஆனால், அன்று, இதுபோல கிரேக்க நாட்டிலே, எவனாவது பேசினால், அவன் நாத்திகனாக்கப்படுவான்! அன்று, அங்கு! இன்று! இங்கு என்ன நிலை?