உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

மாஜி கடவுள்கள்


அமைத்துவிட்டு—ஒரு, விஷவண்டைச் சிருஷ்டித்து அயோமீது ஏவினாள். அது கொட்ட, பசு துடிதுடித்து, வலி தாங்கமாட்டாமல், கடலிலே வீழ்ந்து, நெடுந்தூரம் சென்று கடைசியாக, ஈஜிப்ட் சென்றதாம். ஜுவஸ், தேவியுடன் போட்டியிட்டுப் பயனில்லை என்று கண்டு, கெஞ்சிட தேவி, போனால் போகிறது என்று, பசுவை மீண்டும் பாவையாக்கினாராம்—ஆனால் ஜுவசின் காதலியாக்கவில்லை!

இங்ஙனம், ஹீரா தேவியார், வீராங்கனையாய் விளங்கினார்! அதைக் கூறியே, பக்தர்கள் விசேஷப் பூஜைகள் நடத்தி வந்தனர், ஹீராவுக்கு, நெடுங்காலம்!

ஜுவசின் மற்றோர் காதல் விளையாட்டையும், அம்மை கருகச்செய்து, தன் வீரத்தைக் காட்டினாராம்.

ஆர்கேடியா நாட்டிலே ஒரு வள்ளி!—வேடர்குலமாது—அழகி—எனவே ஜூவஸ், காதல் வேட்டையில் ஈடுபட்டார்! கணவன்மீது–கோபக் கணைகளை ஏவினாள், ஹீராதேவி!

இந்த அழகியின் பெயர் காலிஸ்ட்டா. கட்டழகி காலிஸ்ட்டா, டயானா தேவிக்குத் தோழி! வழுக்கி விழுந்தவளல்ல! வானவில்போன்ற வசீகரமிக்க அழகி! ஒருநாள், அலுத்துப்படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள், பச்சைப் பசும் புற்றரைமீது. பத்தரைமாத்துத் தங்கப்பதுமை போன்ற பாவை! பார்த்தார் ஜுவஸ், அடக்க முடியாத காமப்பசி! கடவுளுக்குத்தான்! அந்த நாட்களில், மனிதனுக்கே அடுக்காத குணத்தை மகேசனுக்கு இருந்ததாகக் கூறிக் களித்தனர்—கும்பிட்டனர் அத்தகைய கடவுள்களை.