ஹீரா தேவி
51
அவளோ படுத்து உறங்குகிறாள்! முழுமுதற் கடவுள் காண்கிறார்—கண்டதும், காமம் மேலிட்டு, அவளை அடைவது என்று தீர்மானிக்கிறார்.
அழகுக்கு ஆண்டவனும் அடிமைப்பட்டுவிடுகிறார், அழகின் அதி அற்புத சக்தியே சக்தி, என்று தத்துவார்த்தம் கூறலாமே இதற்கு என்று எண்ணுவர், இங்குள்ள புராணீகர்கள்—இன்றும்.
துயிலிலிருந்து தோகை மயிலாளை, காதல் கீதம்பாடி, ஜூவஸ் எழுப்பி, “ஏந்திழையே! எவரும் வணங்கிடும் ஜூவஸ் தேவன் நான், இதோ காதலால் கட்டுண்டு நிற்கிறேன், உன்னைத் தொழ! எவருக்கும் எவ்வரமும் அருளும் ஆற்றல் படைத்தவன் நான், எனினும், உன்னிடம் பிச்சை கேட்கிறேன், காதல் பிச்சை! விண்ணிலும் மண்ணிலும் உன்னைப் போன்ற அழகியைக் கண்டேனில்லை! அஞ்சாதே! அழகுத் தெய்வமே! அருகில் வா! உன் ஆலிங்கனம் கிடைத்தாலன்றி நான் உயிர் தரியேன்! என் இதயத்தை வென்றுவிட்டாய் இன்பவல்லி! இனி நான் உன் அடிமை! நீயே, என் பிரியநாயகி!”—என்று தூய காதல் பேசி, அந்தத் துடியிடையாளைக் கடிமணம் புரிந்துகொண்டான், என்று எண்ணிவிடாதீர்கள்.
அவள் ஓர் அழகி! இவர் ஓர் பசி நிறைந்த காளை! அவள் வேண்டும் இவருக்கு—அப்போதே!—அவ்வளவுதான். அதற்கு என்ன செய்வது என்றுதான் எண்ணலானார் ஜூவஸ் தேவன். கடவுளல்லவா, அபூர்வமான யோசனை உதித்தது உடனே, டயானா வடிவமெடுத்தார்—இந்திரன் கௌதம் ரிஷியானானே, அதுபோல! அந்த அகலிகையோ அரிதுயில் செய்கிறாள்—ஜூவஸ், டயானாவானார்.