உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹீரா தேவி

53


வேறு அலுவல்களைக் கவனிக்கச் சென்றுவிட்டார். கற்பிழந்த காரிகை—செச்சே!—அப்படிச் சொல்ல அனுமதிக்க மாட்டார்கள் ஆத்தீகர்கள்—ஜூவஸ் கடவுளுக்கு விருந்தளித்த பாக்யசாலி—கிரேக்க அகலிகை—தன் நிலையை எண்ணி எண்ணி விம்மினாள்—ஆனால் வெளியே சொல்ல முடியுமா—தேவ இரகசியமல்லவா!!

டயானா அறியாள் இதை—மற்றத் தோழியரும் தெரிந்து கொள்ளவில்லை. ஆடிப் பாடிக் களிக்கின்றனர் வழக்கம் போல!

ஒரு நாள், தேவமாதர்கள் நீராடச் சென்றனர்! கெண்டை விழிமாதர், தாமரைத் தடாகத்திலே துள்ளிக் குதித்து விளையாடுகின்றனர்—அவர்கள் களைந்து வைத்த ஆடைகள் காற்றிலே ஆடுகின்றன ஓர் புறம்—இவர்களின் கரம்பட்டுக் கமலங்கள் கூத்தாடுகின்றன. குளத்தில் காலிஸ்ட்டா மட்டும் நீராடவில்லை.

“ஏண்டி, பெண்ணே, இப்படி நிற்கிறாய்! ஆடையைக் களைந்துவிட்டு, நீராடவா”

“வேண்டாமம்மா நான் நீராடப் போவதில்லை”

“ஏன்!”

“வேண்டாம்!”

“என்னடி இது விந்தை! இவ்வளவு பேர் நாங்கள்! நீராடுகிறோம் ஆனந்தமாக—நீ மட்டும் நிற்பானேன்—வா—”

டயானா அழைக்கிறாள், காலிஸ்ட்டா மறுக்கிறாள்.

மற்றவர்கள் சென்று, காலிஸ்ட்டாவை பிடித்து இழுத்து, ஆடையைக் களைகின்றனர்—அகலிகை கருவுற்றிருக்கிறாள்! தேவப்பிரசாதத்தைத் தாங்கி நிற்கிறாள். கண்டாள் டயானா, கடும் கோபம் கொண்டாள்.