56
மாஜி கடவுள்கள்
விடவே, மன்னன் மகளைப் பாதாளச் சிறையிலே போட்டு வைத்தான் கன்னியாக இருந்தபோதே. பித்தளையால் செய்யப்பட்ட சிறை—பூமிக்குள் அதைப் புதைத்து வைத்தான். அந்தச் சிறைக்குப் பலகணியும் கிடையாது—ஒரே கதவு, அதைப் பூட்டி, சாவியை மன்னனே வைத்துக் கொண்டான்—ஒரு கிழவியைக் காவலுக்கும் துணைக்கும் அமர்த்தியிருந்தான். புத்தம் புது மலர், வாடிக் கிடந்தது. சிறையிலே சிங்காரி, சேதி ஜூவசுக்கு எட்டிவிட்டது. மணம் வீசிற்று மகேசனுக்கு. அவ்வளவுதான்! சர்வேஸ்வரனல்லவா!! ஒரு நாள், பொன் மழை பெய்தது, சிறையின் உள்ளே! பொன் மழை என்றால் என்ன—அவரேதான், அந்த வடிவில்! மேகமாக மாறி ஒரு மெல்லிடையாளை மகிழ்வித்ததுபோல, இந்தச் சிங்காரியைச் சேர, பொன்மாரியாக வந்தார்—புதுமலர்—விண்ணுலகத்து விசேஷ அதிகாரம் படைத்த வண்டு! விளைவு பற்றி விளக்கமா தேவை! அழகு மகன் பிறந்தான். அலறினான் மன்னன். ஜூவசின் திருவிளையாடல்தான் இது! வேறு யாரால் முடியும் இந்த ஆற்றல்மிக்க செயல்!—என்று எண்ணி, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் கருதி பெரியதோர் பேழையில், பெண்ணையும் அவள் பெற்றெடுத்த தேவ குமாரனையும் வைத்து, பேழையைக் கடலிலே வீசினான்—அலைக்கோ சுறாவுக்கோ இறையாகட்டும் என்று. தன் இன்பவல்லியும் காதல் கனியும் கடலால் விழுங்கப்படுவதைக் காண மனம் வருமா மகேசனுக்கு. “கடலே! அமைதி!”—என்றார். கடல், அலை நீங்கப் பெற்று பேழையை ஆபத்திலே தள்ளாமல் பாதுகாத்தது. பிறகு தூர தேசத்தில் கரையோரமாகப் பேழை சென்று தங்கிற்று. மீன் பிடிப்போன் கண்டெடுத்து, தாயையும் சேயையும் வளர்த்தான். அந்த தேவ மகன்தான், பெர்ஷியஸ் எனும் கீர்த்தி வாய்ந்த வீரன்!