உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாசிடன்

59


புரியவே புரியாது என்று விட்டுவிடுவதுமில்லை. தட்டுத்தடுமாறிக்கொண்டு சிந்தனைப் பாதையில், மேலும் ஓர் அடி எடுத்துவைக்கும் முயற்சியிலேயேதான், ஈடுப்பட்ட வண்ணம் இருக்கிறது. இந்த முயற்சியில், தன்னலக்காரர் ஈடுபடார், கோழை உள்ளத்தார் ஈடுபடமுடியாதாராகின்றனர், சிலர் ஈடுபட்டு, வாழ்வு சிதையினும், தோல்வி துரத்தித் துரத்தி அடித்தாலும் துவண்டுவிடாது, ஈடுபட்டு, உண்மைகளைக் கண்டறிகின்றனர்; அச்சத்தையும் ஆச்சரியத்தையும் தந்துவந்த பொருளும் காட்சியும், பிறகு, மனித சமுதாயத்துக்கு, விளங்கிக் கொள்ளக் கூடியவைகளாகின்றன.

விளக்கம் கிடைக்காமுன்பு பலன் இல்லை, பொருளாலும், காட்சியாலும்; அல்லவா?

அதோ மூலையில் உள்ள பொருள் என்ன? வளைவாக இருக்கிறது, ஓரளவு பளபளப்பும் தெரிகிறது—ஆனால் என்ன பொருள் என்று விளங்கவில்லை. அருகே சென்று கூர்ந்து பார்த்தால்தானே, என்ன பொருள் என்று தெரியும். போகலாமா, வேண்டாமா? போக முடியுமா முடியாதா? போனால் ஏதேனும் கெடுதி ஏற்படுமோ? நாம்தான் போகவேண்டுமா? வேறு யாராவது கிடைக்க மாட்டார்களா, இந்தக் காரியம் செய்ய—என்ற இவ்விதமான எண்ணங்கள், குடைகின்றன மனதில்.

அந்நிலையில், என்ன பலன் அப்பொருளால்? அது என்ன என்று கண்டறிந்தால்தானே, பயன்படுமா, அல்லவா, என்பதற்கு!

“அதோ பாரப்பா, மூலையில், இருட்டாக இருக்கிற இடத்தில், ஏதோ ஒன்று, வளைவாக, பளபளப்பாக இருக்கிறதே—தெரிகிறதா?”