உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபாலோ

79


உருவத்தை, அழகை, அழகு ததும்பும் கலையை கலையின் ஒரு பகுதியான சிற்பத்தை, சிறுமதியாளனே! நம் பெரியோர்கள் போற்றி வந்தனர். அந்தப் பண்பாட்டையா பாழ்படுத்த வந்தாய்—பாவீ!—உனக்குக் கண்ணில்லையா, கண்டதுண்டோ கண்ணன் போல்—புவியில் கண்டதுண்டோ!—என்று கேட்கிறார்கள், இங்குள்ள பக்தர்கள்.

பலருக்கு அசட்டுத்தனமான ஒரு எண்ணம். அழகின் உருவங்களாக ஆண்டவனைச் சித்தரித்த, பண்பும், கலை உள்ளமும் நம் நாட்டு ஏகபோகச் சொத்து என்று எண்ணுகின்றனர்—அதிலும், கிருஷ்ணன், முருகன், இருவரும் அழகே உருவெடுத்தவர்கள், அவனியில் இவர் போன்ற கடவுளர் வேறு எங்கும், எவருடைய கற்பனையிலும் உதித்ததே கிடையாது என்று பெருமையாகப் பேசிக்கொள்வர், பூஜாரியின் பிரசார போதையில் சிக்குண்டவர்கள். முருகன் என்றாலே அழகன் என்பதுதான் பொருள் என்று விளக்கம் கூறுவர்.

கிரீஸ், ரோம், நாடுகளில், கண்ணன், கந்தன் போன்ற ஆணழகர்களைச் சித்தரித்துத் தொழுது வந்தனர், கடவுட் கொள்கையிலே தெளிவு இல்லாத காலத்தில். இந்த நாட்டுக் கண்ணனுக்கும் முருகனுக்கும் எழிலில் எந்த வகையிலும் குறைவில்லாதவர்தான், கிரேக்க நாட்டுச் சூரிய பகவான், ஆணழகன் அபாலோ தேவன். அபாலோவின் உருவை ஓவியமாகக் காண்பவர், அந்த நாட்களில், கிரேக்க நாட்டிலே, கலை உள்ளம் நேர்த்தியாகத்தான் இருந்தது என்பதை உணருவர்—அதேபோது, அழகின் உருவமான அபாலோ தேவனும் மாஜி கடவுள்தான் என்பதை அறியவேண்டும், இந்த நாட்டு ஆத்திகர்கள். கலையிருக்கிறது எனவே கைவிடோம் என்று அபாலோ தேவனை இன்று கிரேக்க நாட்டிலே தொழுது