பக்கம்:மாணவர்களுக்கு.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணவர்களுக்கு

காஞ்சீபுரம் கொடைவள்ளல் பச்சையப்பர் பெயரால் தோன்றியுள்ள உயர்நிலைப்பள்ளியின் மாணவர்களாகிய நீங்கள் இன்று ஒரு இலக்கிய விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். இவ்விழாவில் கலந்து கொள்ளும் பேறு 200 மைல்களுக்கு அப்பால் உள்ள எனக்கும் கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அதைவிட மாணவர்களாகிய உங்களுடன் பேச வாய்ப்பு கிடைத்திருப்பதை எண்ணும்போது எனக்கு இன்னும் அதிக மகிழ்ச்சி உண்டாகிறது. இறைவனைப் பற்றிப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்பதும், மாணவர்களோடு பேசாத நாட்களெல்லாம் பிறவா நாட்கள் என்பதும் எனது கருத்து. இத்தகைய ஒரு நல்ல வாய்ப்பை எனக்கு உருவாக்கிக் கொடுத்த உங்கள் பள்ளி முதல்வருக்கு என் நன்றி. -

இவ்விழாவின் தலைவர் டாக்டர் சிற்சபை அவர்களின் பேச்சு நன்றாக இருந்தது. என்னைப் பற்றிப் பேசிய பேச்சுகளில் கொஞ்சம் உண்மையும் கலந்திருந்தால் அப்பேச்சு இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஏதோ என் மீதுள்ள அன்பால் அவர்தம் உள்ளத்தில் உள்ளதையெல்லாம் உங்களிடம் கொட்டிக் குவித்துப் பேசி விட்டார்கள். இருந்தாலும் அவைகளையெல்லாம் இனிமேலாவது நான் செய்யவேண்டும் என்று நல்ல தமிழாலே வாழ்த்தியிருக்கிறார்கள் என்று எண்ணி, வணக்கத்தோடு அவைகளை ஏற்றுக் கொள்ளுகிறேன். அவர்கள் எண்ணம் இனியாகிலும் நிறைவேறட்டும். -