பக்கம்:மாணவர்களுக்கு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

மாணவர்களுக்கு

 பேச்சின் தலைப்பு மாணவரும் தமிழும். பேசுகின்ற நேரம் அறுபது மணித்துளிகள். பேச்சின் கருத்து தமிழ் மொழி மிகவும் உயர்ந்தது என்பது. பேசுவதின் நோக்கம் மாணவர்களாகிய நீங்கள் தமிழ் மொழியை விரும்பிப் படிக்கவேண்டும் என்பது. பேச்சின் பயன் என்னைப் பொறுத்ததல்ல; அது உங்களிடத்தில் எதிர்காலத்தில் தோன்ற வேண்டிய ஒன்று.

பேசத் தொடங்குமுன் ஒரு அறிவுரை அல்ல, அறவுரை கூறுகிறேன்.

அறவுரை

நீங்கள் ஒரு நல்ல நாட்டிலே பிறந்திருக்கிறீர்கள். 'தமிழ்நாடு’. நீங்கள் ஒரு நல்ல மொழியைத் தாய்மொழியாகப் பெற்றிருக்கிறீர்கள். தமிழ் மொழி. நீங்கள் ஒரு நல்ல மேல்நிலைப் பள்ளியில் பயின்று கொண்டிருக்கிறீர்கள். 'பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி'. இவற்றை எண்ணிப் பெருமையடைய உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் இப்பெருமை போதுமா? போதாது. உங்களைப் பெற்ற நாடும், வளர்த்த மொழியும், பயிற்றுவித்த பள்ளியும் பெருமையடைய வேண்டும்.

நீங்கள் பள்ளிப்படிப்பை முடித்து வெளிநாடுகளிற் சென்று பணிபுரியும்போது, 'இவன் தமிழ்நாட்டான்' எனும் பொழுது உங்களைப் பெற்ற நாடு பெருமைப்படும். நீங்கள் தமிழ் இலக்கியங்களிலே படித்த உயர்ந்த கருத்துக்களையெல்லாம் பிற மொழிகளிலே வடித்துத் தருகின்ற பொழுது உங்களை வளர்த்த மொழி பெருமையடையும். நீங்கள் படிப்பை முடித்து பம்பாயிலோ, கல்கத்தாவிலோ, லண்டனிலோ, பாரீசிலோ பணிபுரியும் பொழுது. இவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/13&oldid=1265155" இலிருந்து மீள்விக்கப்பட்டது