பக்கம்:மாணவர்களுக்கு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

35

"என் மகன் படிக்கவில்லை. எனக்கு இரண்டு எருமைகள் உள்ளன. அவற்றை மேய்த்துக் கொண்டிருக்கிறான்” என்றான் ஒருவன். அதைக் கேட்ட புலவர் பெருமகன் கவிராச செகவீர பாண்டியனார் கூறியது என்ன தெரியுமா? 'இனி எனக்கு இரண்டு எருமைகள் உள்ளன என்று எவரிடமும் கூறாதே. மூன்று எருமைகள் உள்ளன என்றே கூறு' என்பதே. பாவம்! கல்லாத மக்கள் பொல்லாத விலங்குகள் என்பது அப்புலவர் பெருமகன் கருத்துப் போலும்.

கல்விச் செல்வம் இளமையில் பெறவேண்டிய ஒன்று.பெறாதவர்கள் முதுமையில் வருந்த வேண்டி வரும். இளமையில் கல்வி பயிலாத ஒரு மாணவன் முதுமையில் கதறி அழுது தன் தந்தையை வைது கூறியிருக்கிறான். அப்பாடல் இது.

அள்ளிக் கொடுக்கின்ற செம்பொன்னும் ஆடையும் ஆதரவாய்க்
கொள்ளிக்கும் பட்ட கடனுக்கும் என்னைக் குறித்த தல்லால்
துள்ளித் திரிகின்ற காலத்திலே என்றன் துடுக்கடக்கிப்
பள்ளிக்கு வைத்திலனே என் தந்தையாகிய பெரும் பாதகனே.

எப்படி, இப்பாடல்! மாணவர்களாகிய நீங்கள், இப்பாடலைப் பலமுறை திரும்பத் திரும்பப் படிப்பது நலமாகும்.

ஒ. திருத்தமாக எழுது

மாணவர்களாகிய நீங்கள் இப்பொழுதிலிருந்தே எழுத்துக்களை கால் வாங்கித் திருத்தமாக எழுத வேண்டும். தவறினால் உங்கள் எழுத்துக்கள் பிறரால் படிக்க முடியாமல் போய்விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/34&oldid=1268698" இலிருந்து மீள்விக்கப்பட்டது