பக்கம்:மாணவர்களுக்கு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

37

எழுதுகிறவனெல்லாம் எழுத்தாளன் அல்ல. அவன் எழுத்தன். அவ்வளவுதான். எழுத்தை ஆள்பவன் தான் எழுத்தாளன்.

உயர்ந்த உள்ளத்தைப் பெற்று நிறைந்த கருத்துக்களைத் தேடி, சிறந்த சொற்களைக் கொண்டு, குறைந்த எழுத்துக்களால் எழுதப்படுவதே எழுத்து என்றாகும். அவ்வாறு எழுதபவனே எழுத்தாளன்.

நெற்களைத் தேய்த்து உமியை ஊதிவிட்டால் அரிசிகள் காணப்பட வேண்டும். எழுத்துக்களைப் படித்து நீக்கிவிட்டால், கருத்துக்கள் காணப்பட வேண்டும். இன்றேல் நெற்பதரைப்போல அதுவும் ஒரு பதராகிப் போய்விடும்.

எழுத்துக்கு ஒரு ஆற்றல் உண்டு. அதுவும் பேராற்றல். மன்னனின் செங்கோலைவிட மக்களின் எழுதுகோலுக்கு அதிக ஆற்றல் உண்டு.

வில்லும் வேலும் கண்ணாற் கண்டவரின் உடலில் மட்டுமே பாயும். ஆனால் எழுத்து கண்ணாற் காண முடியாதவர் உள்ளத்திலும் பாய்ந்துவிடும்.

நெறி என்பது நன்னெறியையே குறிக்கும். நெறியில் நன்னெறி, தீ நெறி என இரண்டில்லை. தீநெறியைக் குறிப்பிட நேர்ந்தால் அதைத் தீநெறி என்றெழுதாமல், நெறியல்லா நெறி என்று எழுதுவதே மரபு. அது எழுத்து. அவன் எழுத்தாளன்.

எழுத்துக்களைக் குறைத்து, கருத்துக்களை நிறைத்து, எழுதுவது நல்லது. பல பக்கங்களில் ஒரு கருத்துக் காணப்படுவதைவிட ஒரு பக்கத்தில் பல கருத்துக்கள் காணப்படுவதே எழுத்தாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/36&oldid=1268703" இலிருந்து மீள்விக்கப்பட்டது