பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

சம்பந்தமான விஷயங்களைப் போதிப்பதற்காகச் சிலரை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

அவர்களின் வேண்டுகோளின்படி, ஆஸிம்-இப்னு-தாபித் உட்பட ஆறு பேரை பெருமானார் அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

அவர்கள் அர்ரஜீஃ என்னும் இடம் போய்ச் சேர்ந்ததும், அவர்களை அழைத்துக்கொண்டு சென்றவர்கள் பக்கத்திலுள்ள வேறு ஒரு கூட்டத்தாரைத் தூண்டிவிட்டு, முஸ்லிம்களைத் தாக்கிக் கொல்லும்படி செய்தார்கள். அவர்கள் இருநூறு பேர் ஆயுதங்களுடன் தாக்குவதற்கு வந்தனர். முஸ்லிம்கள் அறுவரும் அருகிலிருந்த ஒரு குன்றின்மீது ஏறிக் கொண்டார்கள்.

"நீங்கள் கீழே இறங்கி வந்தால், உங்களை நாங்கள் பாதுகாப்போம்" என்றார்கள் அந்தக் கூட்டத்தாரில் அம்பு எய்வோர்.

முஸ்லிம்களின் தலைவர் ஆஸிம் அதற்கு, "விசுவாசமற்றவர்கள் ஆதரவில் வரமாட்டோம்" என்று பதில் அளித்துக் கீழே இறங்கி சண்டை செய்து வீர மரணம் அடைந்தனர்.