உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

11



3. கொடையாளன் பண்பு


பண்டைத் தமிழகம். அப்பப்பா! பொறி பறக்கும் பாலை நிலம்; போக முடியாத நீண்ட வழி கடக்கமுடியாத பெருங் காடுகள்.

அக்காடுகளின் இடையே, வில்லேர் உழவர் வாழ்கின்றனர். அவர்கள் யாருக்கும் அஞ்சாத மறவர்கள். ஆறலைகள்வர். வழிப்பறி செய்வதே அவர்கள் தொழில். மக்கள் பொருள் தேடும் பொருட்டு, அயல்நாடு செல்வது உண்டு. அவர்கள் அப்பாலை நிலத்தைக் கடந்து செல்ல வேண்டும். பரற்கற்கள் பாதத்தைப் புண்ணாக்கும்; உடலைக் கிழிக்கும் முட்புதர்கள் நிறைந்த இத்தகைய நீண்ட வழிகளைக் கடந்து சென்றுதான் பொருள்தேட வேண்டும்.

வணிகக் கும்பல் ஒன்று அவ்வழியே சென்றது. கோடை கடுமையாக எரித்துக் கொண்டிருந்தது. பாலை நிலம் கொதித்துக் கொண்டிருந்தது.

ஆனால், அவ்வெம் பாலையைக் கடந்து சென்ற வணிகர்கள் பட்டபாட்டை என்னென்பது. திடீரென்று அக்கும்பலின் மேல், அம்புகள் பாய்ந்தன. அவர்கள் அய்யோ அம்மா என்று அலறினார்கள். அம்புபட்ட வணிகர்கள் கீழே வீழ்ந்தனர். கதறித் துடிதுடித்து இறந்தனர்.

மறைந்திருந்து அம்பெய்திய மறவர்கள், விற்களுடன் ஓடிவந்தனர். வீழ்ந்தோரிடமிருந்த பொருட்களைக் கவர்ந்தனர், பிணங்களின் மேல் கற்களை அடுக்கி, மறைத்து விட்டுச் சென்றனர்.