பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அணிந்துரை

இலக்கணம் பாடத்தை மாணவர் இளமையிலேயே நன்கு பயிலல் வேண்டும். அங்ங்னம் அவர்கள் அவாவிப் பயின்று அறிந்துகொள்வதற்கு உரைநடையில் அமைந்த இலக்கண நூல்களே சாலச் சிறந்தவையாகும். இக்காலத் தில் சிறுவர்க்காக உரைநடை இலக்கண நூல்கள் பல வெளிவந்துள்ளன. அவற்றுள் சிலவே கல்வி இலாக்கா அதிகாரிகளின் பாடத் திட்டப்படி அமைந்துள்ளன.

இன்று வெளிவரும் இந்த மாணவர் தமிழ் இலக்கண விளக்கம் என்னும் சிறு நூல் 6, 7, 8 ஆம் வகுப்புகட்குக் கல்வி இலாக்கா அதிகாரிகளின் பாடத்திட்டப்படி அமைந்த இலக்கணப் பாடங்களை விளக்குவதாகும். ஒரு வகுப்பிற்குக் கூறப்பெற்ற பாடம் பிற வகுப்பிற்கு இதிற் கூறப்படவில்லை. ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி பாடங்களே வகுத்துக் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடப் பகுதியின் ஈற்றிலும் பயிற்சி வினாக்கள் தரப்பெற்றுள்ளன. இப்பயிற்சி வினாக்களும் மாணவர்க்குப் பெரிதும் பயன் தரும்.

இந்நூலை ஆக்கிய ஆசிரியர் வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார் அவர்கள் முன்பே பற்பல விதமான நூல்களை ஆக்கி, மாணவர்கட்கும் தமிழ் உலகுக்கும் உதவியுள்ளார்கள். அவை தமிழ் நாடெங்கும் பரவி அறிஞரால் நன்கு மதிக்கப்பெற்று விளங்குகின்றன. அங்ங்னமே இவ்விலக்கண உரைநடை நூலையும் மாணவர்க்கும்; மற்றவர்க்கும் மிகப் பயன்படும் வண்ணம் ஆராய்ந்து இனிய எளிய நடையில் இயற்றி வெளியிட்டுள்ளார்கள், ஆகையால், இதைக் கண்ணுறும் ஆசிரியர்கள் இதனால் உண்டாகும் பயனைத் தங்கள் மாணவர் அடையுமாறு செய்வார்களென்று எண்ணுகின்றேன்.

இங்ஙனம்:

கா. மு. சின்னப்பா பிள்ளை,