பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

இப்போது நீ தான் பலி!” என்று கூறி ஆட்டுக்குட்டி மீது பாய்ந்து கொன்று தின்றது அந்த ஓநாய்

ஆட்டுக்குட்டிக்குப் பரிந்து பேச எவரும் இல்லை
எளியோரை வலியோர் அழிப்பது இயல்பே!


4
ஏட்டிக்குப் போட்டி

ஒரு ஊரில் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவன் ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தான். அவன் மனைவி குணக்கேடானவள். கணவன் ஏதாவது சொன்னால், அதற்கு மறுப்புக் கூறுவது அவள் வழக்கம்.

அவனும் அவளுக்குப் பதில் சொல்லாமல், மெளனமாகவே இருந்துவிடுவான்.

அவனுடைய தாய் இறந்து போய், ஒரு வருடம் ஆகிறது. மறுநாள் அந்த நினைவு நாளைக் கருதி நெருங்கிய உறவினர்களை அழைத்து உணவு அளிப்பது, அவனுடைய சமூக வழக்கம்.

அதைச் செய்ய வேண்டும் என்பது அவனுடைய விருப்பம். மனைவியிடம் அதைச் சொன்னால், அவள் மறுத்து விடுவாளே என்று வருத்தப்பட்டுக் கொண்டே கடையிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.

வரும் வழியில், அவனுடைய பள்ளி ஆசிரியர் எதிரே வந்தார். “உன் முகம் வாட்டமாய் காணப்படுகிறதே, என்ன விஷயம்?” என்று கேட்டார்.