பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அதைக் கேட்டதும், கரும்பலகையில், என்னவோ கணக்குப் போட்டு, கண்ணை மூடிக் கொண்டு, வாய்க்குள், முணுமுணுத்து “செட்டியாரே! நேராக தெற்கே போனால், ஊருக்கு வெளியே, பாழடைந்த ஒரு சத்திரம் காணப்படும், திருடர்கள் அதில் குதிரையை மறைத்து வைத்திருப்பதாகத் தெரிகிறது” என்றான் ஆனந்தன்.

செட்டி சில ஆட்களோடு அந்தச் சத்திரத்திற்குச் சென்றான்.

ஆனந்தன் கூறியபடி அங்கே குதிரை மறைவாகக் கட்டப்பட்டிருந்தது. மகிழ்ச்சியோடு, அதை ஒட்டி வந்தனர்.

செட்டி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஆனந்தனுக்கு நிறைய பணம் கொடுத்தான். அவனுடைய சோதிடத்தின் பெருமையைப் பலரிடம் சொன்னான். அவன் மதிப்பும், புகழும் ஊர் முழுதும் பரவியது.

ஆனால், குதிரையை முதல் நாள் இரவில் திருடிக் கொண்டு போய் சத்திரத்தில் கட்டிவைத்தவன் ஆனந்தனே என்பது எவருக்குமே தெரியாது.


6
விவசாயி அடைந்த வருத்தம்

கிராமத்திலிருந்து ஒரு விவசாயி நகரத்துக்கு வந்தான். பசி எடுத்தது அவனுக்கு ஒரு சிற்றுண்டி விடுதிக்குச் சென்று, ஒரு தோசை கொண்டு வரச் சொல்லி, சாப்பிட்டான், பசி அடங்கவில்லை. மேலும், ஒரு தோசை கொண்டுவரச் சொல்லி, அதையும் சாப்பிட்டான் அப்பொழுதும் அவன் வயிறு நிறையவில்லை. மூன்றாவது தடவை, ஒரு தோசை வரவழைத்து அதையும் சாப்பிட்டான். பசி அடங்கவில்லை.