பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அதைக் கண்டு வெறுப்படைந்த அந்தணப் பெரியவர் ஒருவர், சோமனிடம் “நீ அந்தண குலத்தில் பிறந்தவன் அல்லவா? தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுடன் பழகலாமா?” என்று கண்டித்து அவனை ஏசினார்.

பெரியவரின் பேச்சு அவனுக்குக் கோபத்தைத் தூண்டியது, “கடவுளின் படைப்பில் உயர்வு தாழ்வு எப்படி இருக்க முடியும்? பிறப்பு என்பது எல்லோருக்கும் சமம். அதில் வேறுபாடு காண்பது முட்டாள்தனமானது. மேலும், அந்த தாழ்த்தப்பட்ட இனத்தவர், உழுது பயிர் செய்து தருவதைத்தானே அனைவரும் சாப்பிடுகிறோம். அதில் வேறுபாடு காண்கிறோமா? மக்களின் பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிப்பது முட்டாள் தனமானது.” என்று கூறினான்.

பெரியவர் பேசாமல் சென்று விட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு, அந்த அந்தணப் பெரியவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, மயக்கமுற்றுக் கீழே விழுந்துவிட்டார். அதைப் பார்த்த தாழ்த்தப்பட்ட இனத்தவன் ஒருவன், ஓடி வந்து, அவர் முகத்தில் தண்ணிர் தெளித்து, சிறிது தண்ணிர் குடிக்கச் செய்து, அருகில் இருந்த, தன் குடிசைக்குத் தூக்கிச் சென்று மயக்கத்தை தெளியவைத்து உதவினான்.

பெரியவர் எழுந்து புறப்படும் போது எதிர்பாராமல் அங்கே வந்த சோமன், “அந்தணப் பெரியவர்! மயக்கமுற்று கீழே விழுந்த உங்களைக் காப்பாற்றி உயிர்பிழைக்கச் செய்தவன் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன் என்பதை நினைத்துப் பாருங்கள் உங்கள் இனத்தவர் வரும்வரை காத்திருந்தால் நீங்கள் செத்துப் போயிருப்பீர்கள்” என்று இடித்துக் காட்டினான். பெரியர் தலைகவிழ்ந்து, எதுவும் பேசாமல் நடக்கலானார்.