பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

8
பொதுஅறிவு இல்லாதவன்

ஒரு ஊரில் ஒரு பண்ணையார் இருந்தார். அவருக்குச் சொத்துக்கள் ஏராளமாக இருந்தன.

பண்ணையாருக்கு ஒரே ஒரு பெண்தான்! ஆனால், அந்தப் பெண் ஆணைப் போலவே வளர்ந்தாள். கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றாள். மேலும், கலை, இலக்கியம், இசை ஆகிய வற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தாள்.

பெண்ணுக்குத் தகுந்த மாப்பிள்ளை தேட முயற்சி எடுத்தார் பண்ணையார்.

வரக் கூடிய மாப்பிள்ளை தன் வீட்டோடு இருக்கக் கூடியவனாகப் பார்த்தார்.

பல மாதங்களாக, பல ஊர்களில் பார்த்தும், எதுவும் பொருத்தமாக அமையவில்லை. எவனுமே மாமனார் வீட்டில் தங்கும் மாப்பிள்ளையாக வர விரும்பவில்லை.

பக்கத்தூரில் பையன் ஒருவன் இருந்தான். அவனுக்கு தாய், தகப்பன் இல்லை. கல்லூரியில் படிக்க வசதி இல்லை. சிற்றப்பன் வீட்டில் தங்கி இருந்தான். அவன் வேலை தேடியும், விண்ணப்பம் போட்டுக் கொண்டும் இருந்தான்.

பண்ணையார் அவனைப் பற்றி விசாரித்தார். “அவன் ஏழையாக இருந்தாலும், பரவாயில்லை, அவனையே ஏற்பாடு செய்து, பெண்ணை திருமணம் செய்து கொடுத்து அவனை வீட்டோடு வைத்துக் கொள்ளலாம்” என்று சிலர் கூறினார்கள்.

அந்த ஏழை இளைஞனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்து வைத்தார் பண்ணையார்.