பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

நெல்லும், உணவுப் பொருள்களும் சேகரித்து, நூறாவது நாளில் கங்கைக் கரையில், உலக நன்மையைக் கருதி, ஒரு யாகம் நடத்தி, ஆயிரம் ஏழைகளுக்கு உணவு அளிக்க விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்த நல்ல காரியத்துக்கு தாங்களும் உதவி, மற்றவர்களையும் உதவச் செய்ய வேண்டும், இந்த ஏற்பாட்டுக்குத் தாங்கள் தலைவர் என்று மிகவும் பணிவோடு கூறினான் புரோகிதன்.

அவன் கூறியதை நம்பிய வணிகன், அவனை ஒரு பிராமணன் வீட்டில் தங்கச் செய்தான், அதோடு நெல்லும், உணவுப் பொருள்களையும் கொடுத்தான். மற்றவர்களையும் கொடுக்கும்படி கூறினான். அவற்றை எல்லாம் கொண்டுபோய் அடுத்த ஊரில் விற்று ஆயிரம் பொன்வரை சேர்த்து விட்டான். அதைக் கொண்டுபோய் தொலைவில் உள்ள மரத்தடியில் புதைத்து வைத்துவிட்டான் புரோகிதப் பிராமணன்.

“உணவுப் பொருள்கள் எல்லாம் எங்கே?” என்று விசாரித்தான் வணிகன். “சேரச் சேர, அவற்றை கங்கைக் கரைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன்” என்றான் புரோகிதன்.

தினமும் காட்டுக்குப் போய் தான் புதைத்து வந்த பொன் இருக்கிறதா, என்று பார்த்து வந்தான் புரோகிதன்.

வழக்கம் போல், அவன் போய் பார்க்கும் போது, புதைத்து வைத்த பொன் காணாமல் போனதை அறிந்து, அலறி அடித்து ஒடி வந்து வணிகனிடமும், தான் தங்கியிருந்த வீட்டுப் பிராமணனிடம், பறிகொடுத்ததைச் சொல்லி அழலானான்.

அவனுக்கு உதவி செய்த வணிகன், “பொருள் நிலையில்லாதது. மேகம் போல் வந்து, மறைந்து விடும் தன்மை உடையது தானே, மேலும், நீ உழைத்துச் சம்பாதித்தது இல்லையே, ஊராரை ஏமாற்றி சேர்த்தது தானே?” என்றான்.