பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 மாணிக்கவாசகர்



(கனவேயும் - கனவிலும்; புனவேய் அன்ன - காட்டு மூங்கிலையொத்த நனவே - நல்ல விழிப்பு நிலையிலேயே; சினவேல்கண் - சிறிய வேல் போன்ற கண்கள்; சின . சின்ன (விகாரம்))

என்பது இதன் பத்தாம் பாடல். வானோர்க்குக் கனவிலும் அகப்படாத அம்மெய்ப்பொருள் தமக்கு நனவிலேயே எளிவந்தருளினமையைச் செப்புகின்றார் இதில்.

21 திருப்பூவல்லி (18)

திருப்பூவல்லி’ என்பது அழகிய பூக்களையுடைய கொடி என்று பொருள்படும். இச்சொல் பூக்கொய்தலாகிய இளமகளிர் விளையாட்டினையும் அவ்விளையாட்டில் பாடப்பெறும் வரிப்பாடலையும் குறித்த பெயராக இங்கு ஆளப்பெற்றுள்ளது. இறைவனுக்குச் சாத்துதற்கென நறுமலர் கொய்யும் சிறுமியர்கள் பலர்கூடிப் பூப்பறித்தலும், நீர்ப்பூக்களைப் பறித்தலும், அவற்றைத் தம் தலையிலும் "குழமகன்" தலையிலும் சூட்டி மகிழ்தலும் மரபு. அங்ஙனம் பறிப்பதை ஒரு விளையாட்டுபோல் மேற்கொள்வர். இந்த விளையாட்டில் இறைவனது கருணைத் திறத்தை வியந்து பாடும் முறையில் அடிகள் இத்தெய்வப் பனுவலை அருளிச் செய்துள்ளார்.

இப்பனுவலுக்கு "மாயாவிசயம் நீக்குதல்-மாயையின் பலத்தை மறுத்தல்" என்பது பழைய குறிப்பு. வானோராலும் அறியவொண்ணாத சிவபெருமான் மாயையின் தொடர்ச்சியுட்பட்டு மதி மயங்கும் மனிதர்களாகிய நம்


6. இது தில்லையில் அருளப்பெற்றதாகக் கடவுள் மாமுனிவர் கருதுவர்.

7. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் குறித்த பல்வரிக் கூத்தினுள் ஒன்றாகிய "கொய்யு முள்ளிப்பூ" என்பது இப்பூவல்லியாகிய விளையாட்டினைக் குறிக்கும் எனக் கருதுதல் பொருத்தமாக அமைகின்றது.