பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 மாணிக்கவாசகர்



கொள்ளுதல். எம்பெருமானே பள்ளி எழுந்தருளாயே என்ற பாடல்களின் ஈற்றடிகளே இக்கருத்தை நன்கு விளக்கும். உறங்கலும் விழித்தலும் இன்றி இமையாமுக்கண்ணினனாய், தானே முழுதுணரும் இயற்கையுணர்வினனாய், நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் இறைவனைத் துயிலெழுப்புவதென்பது உண்மை நிகழ்ச்சியாதலின்றி வெறும் உபசாரமேயாகும், ஆயினும் துஞ்சும் பொழுதாடும் சோதி ஆகிய அம்முதல்வனை, உறங்கி விழிக்கும் இயல்பினராகிய மாந்தர் தாம் துயிலெழுங்காலத்துத் தொழுது கொண்டு எழுதல் இன்றி யமையாதது. ஆதலின் அவனருளாலே அவன் தாள் வணங்கித் துயிலெழும் வழிபாட்டு நெறி முறையினை மாந்தர்க்கு அறிவுறுத்தும் நோக்கத்துடன் வாதவூரடிகளால் அருளப் பெற்றது திருப்பள்ளியெழுச்சி என்னும் இப்பனுவலாகும். இது பத்துப் பாடல்களைக் கொண்டது.

இப்பதிகத்திற்கு "திரோதான சுத்தி - ஏகமாகிய திரோதாயி மறைப்பான மலம் நீங்குதல்" என்று பழைய குறிப்புகள் கூறும்.

  ஏர்மருவு திருப்பள்ளி எழுச்சி 
     பணிவிடை கேட்டு 
  ஆர்வமுடன் ஆண்ட அரற்கு
     அன்பு செயும் இயல்பே

எனத் திருப்பெருந்துறைப் புராணமுடையார் இப்பதிகக் கருத்தினைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னிலைப் பரவலாக அமைந்த இத்திருப்பதிகத்தில் திருப்பெருந்துறையுறை சிவபெருமானை இறைஞ்சி எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே எனப் பாடல்தோறும் அடிகள் இறைவனை வேண்டிப் போற்றுதல் காணலாம். இவ்வாறே தொண்டரடிப் பொடியாழ்வாரும் திருவரங்கப் பெருமானைப் போற்றித் திருப்பள்ளி எழுச்சி (10 பாசுரங்கள்) பாடியுள்ளமை இங்குக் கருதத்தகுவதாகும். தேசிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரும் பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி' (5 பாடல்கள்)