பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 91



பாடியுள்ளமை காணத்தக்கது. பள்ளி எழுந்தருளாய்” என்ற தொடருக்கு எமது உள்ளத்தில் திருப்பள்ளி ஒலக்கம் கொள்ள எழுந்தருள்க' எனப் பொருளுரைப்பர் சீகாழித் தாண்டவராயர்.

போற்றி என் வாழ்முதலாகிய பொருளே (1) எனத் தொடங்கும் பாடலில் நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கொண்டு நின் திருவடி தொழுவோம்' என்றது இறைவனது திருமுகத்தின் முறுவல் நகையினைக் கண்டு “அவனருளாலே அவன்தாள் வணங்க விரும்பும் அடியார்களது விருப்பத்தினைப் புலப்படுத்துவதாகும். 'முத்தா உன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகை காண அத்தா சால ஆசைப்பட்டேன்’ (ஆசைப்பத்து-6) என அடிகள் தம் உள்ளத்தமைந்த ஆசையினை வெளியிட் டுள்ளமை இங்கு நினைக்கத் தக்கதாகும்.

"பூதங்கள் தோறும் நின்றாய்" (5) எனத் தொடங்கும் திருப்பாடல் மாற்ற மனங்கடந்த மறையோனாகிய இறைவனைக் குறித்துப் புலவர்கள் பாடிப் போற்றும் தோத்திரப் பாடல்களின் பொருளமைதியைச் சுட்டுவதாகும், "பப்பற" (6) என்ற பாடல் ஆண்டவனைக் காதலனாகவும் தம்மை அவனது அன்புக்குரிய காதலியாகவும் எண்ணி வழிபடும் அடியார்களது ஆராக் காதலைப் புலப்படுத்துவதாகும். "முந்திய முதல் நடு இறுதியுமானாய்" (8) என்ற பாடல் திருப் பெருந்துறையில் சிவபெருமான் குருவாக எழுந்தருளித் தம்மை ஆண்டு கொண்டருளிய திறத்தை அடிகள் பரவிப் போற்றும் நிலையில் அமைத்துள்ளது. விண்ணகத் தேவரும் நண்ணுதற்கரிய விழுப்பொருளாகிய சிவபெருமான், தம் கண்ணகத்தே நின்று களிதரு தேனாக எழுந்தருளிய சீர்த்தியினையும், நாம் வாழும் உலகமாகிய இப்பூமி சிவன் உய்யக் கொள்ளுகின்ற நெறியாகத் திகழும் சிறப்பினையும் இறுதி இரண்டு பாடல்களில் (9,10) அடிகள் குறித்துப் போற்றியுள்ளனர்.