பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. திருப்பெருந்துறையில்-திருச்சதகம்



பாண்டியனிடம் விடைபெற்றுக் கொண்டு ஆலவாய் அண்ணலை வணங்கியவர் நேரே திருப்பெருந்துறைக்கு வருகின்றார் மணிவாசகப் பெருமான். தம்மை ஆட்கொண்ட குரு நாதரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்குகின்றார்,அடியார் குழுவில் ஆசிரியத் திருமேனியுடன் திகழும் இறைவன் வாதவூரடிகளுக்குத் திருநீறுதரித்து அருட்பார்வை-நயனதீட்சை-நல்குகின்றார். இறைவன் பணித்தவண்ணம் குருந்தமரத்தடியில் ஒரு தெய்வபீடம் அமைத்து அதன்மீது இறைவன் திருவடிகளை வைத்து வழிபட்டிருக்கின்றார். சின்னாட்களுக்குப் பின்னர் பொய்கையில் தீப்பிழம்பு தோன்றுகின்றது. அடியார்கள் அஞ்செழுத்தோதி அதில் புகுந்து சிவகணநாதர் களாகிக் கயிலையை அடைகின்றனர். கொன்றை மரநீழலில் சிவயோகத்தில் அமர்ந்திருந்த வாதவூரடிகள் தீப்பிழப்பு நிகழ்ச்சியினை யோகக் காட்சியாலுணர்ந்து பொய்கைக் கரையடைந்து இறைவனையும் அடியார்களையும் காணாது அழுதரற்றுகின்றார். பின் ஒருவாறு உள்ளந் தெளிந்து குருந்தமர நீழலையனுகி இறைவன் திருவடிகளை இறைஞ்சி நின்று மெய்தானரும்பி எனத்தொடங்கி பாடல்களால் அழுதரற்றுகின்றார். இப்பாடல்களே திருச்சதகம் என்று பெயர் பெறுகின்றன. "அழுதடி அடைந்த அடிகள்"


1. இந்த வரலாறு திருவாதவூரடிகள் புராணத்தில் கண்டது.