பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருப்பெருந்துறையில்-திருச்சதகம் 93


 என்று பரஞ்சோதியார் போற்றும் நிலைக்கு வந்து விடுகின்றன.

25. திருச்சதகம் (5)

தெய்வத்தன்மை வாய்ந்த நூறு திருப்பாடல்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குதலால் 'திருச்சதகம்' என்ற திருப்பெயரைப் பெறுகின்றது. சதகம் என்ற வடசொல் நூறு என்ற எண்ணினைக் குறிக்கும் பெயர் இச்சொல் 'க' என்னும் ஓர் இடைச்சொல்லைப் பெற்று "சதகம் என்ற பெயராகி நூலைக் குறிப்பதாகக் கூறுவர். இதிலுள்ள பாடல்கள் அந்தாதித் தொடையில் அமைந்தவை. ஒரு பாடலின் இறுதியிலுள்ள ஒரு சொல் அல்லது சொற் றொடர் (அல்லது எழுத்து) என்னும் இவற்றுள் ஒன்றை அடுத்த பாடலின் தொடக்கமாகக் கொண்டு பாடப்பெறுவது அந்தாதியாகும். நூல் மெய்தான் அரும்பி என்று தொடங்கிப் பாடல்கள் யாவும் அந்தாதித் தொடையில் அமைந்து மெய்யர் மெய்யனே' என்று இறுதிப் பாடல் முடிகின்றது.

இப்பனுவல் (l) மெய்யுணர்தல், (2) அறிவுறுத்தல், (3) சுட்டறுத்தல், (4) ஆத்துமசுத்தி, (5) கைம்மாறு கொடுத்தல், (6) அதுபோக சுத்தி, (7) காருணியத்திரங்கல், (8) ஆனந்தத் தழுங்கல், (9) ஆனந்தபரவசம், (10) ஆனந்தாதீதம் என்ற பத்துத் தலைப்புகளை உடையதாய், ஒவ்வொரு தலைப்புக்கும் பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்டதாய் பத்து யாப்பு விகற்பங்களையும் பெற்றுள்ளது. இந்தப் பனுவல் அமைப்பு முறையினை அடியொற்றிப் பிற்காலத்தில் தோன்றியதே பதிற்றுப் பத்தந்தாதி என்னும் சிற்றிலக்கியம் என்பது நாம் நினைத்தற்குரியது.

குருந்த மரத்தடியில் தம்மை ஆட்கொண்ட குருநாதனாகிய இறைவன்பால் அடிகள் கொண்டுள்ள எல்லையற்ற பேரன்பினைப் புலப்படுத்தும் பாங்கில் அமைந்தது இப்பக்திப்