பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருப்பெருந்துறையில்-திருச்சதகம் 101


 (வெள்ளம் - கங்கைநீர்; வேட்ட - விரும்பிய பள்ளந் தாழ் உறுபுனல் - பள்ளத்தை நோக்கி ஓடும் நீர்; உள்ளந்தாள் - உள்ளங் கால்)

என்பது இதன் முதற் பாடல். இதில் இறைவன் தன்னை ஆட்கொண்ட அருமைப் பாட்டினை எண்ணி எண்ணித் தன் நெஞ்சம் தாழாமைக்கு மிக மிக மாழாந்து உரைத்தருளுகின்றார் இதில். பேரருளாளனாகிய இறைவனை உணர்ந்து போற்றுதற்குத் தாம் பெற்றுள்ள கருவி கரணங்கள் போதிய ஆற்றல் வாய்ந்தவையல்ல என்பதை அடிகள் இங்குப் புலப் படுத்துகின்றார். இதில், "கங்காதரா என்றும் சடாதரா என்றும் இடப ஊர்தியையுடையவனே என்றும், விண்ணவர்க்கும் (மண்ணவர்க்கும்) மேவிய பெருமானே என்றும் உன்னை அழைப்பதைக் கேட்ட மாத்திரத்தில் உன் அன்பர்கள் அளவிறந்துள்ள வேட்கையுடையராய்ப் பரவச மடைகின்றனர். பேர் அருவி வீழ்கின்றமடுவினுள் தலைகீழாக மாட்டிக்கொண்டவர்கள் உயிர்தப்பிக்கத்திணறுவதுபோன்று உன் மெய்யடியார்கள் உன் அருளைப் பெறப் பேர் அவா உறுகின்றனர். அன்னவர்களைக் காத்திருக்க வைத்து விட்டு என்னை நீ ஆட்கொண்டுள்ளாய். அவர்கள் பெற்றுள்ள பேர் அவாவைப் பெறுவதற்கு அடியேனது சிறுநெஞ்சும் போதாது. உள்ளங்கால் முதல் உச்சியளவும் நான் நெஞ்சு ஆகி உருக வேண்டும். அவர்கட்கு நிகராக அன்புக் கண்ணிர் மல்குதற்கு எனக்கு இரண்டு கண்கள் போதா. உடம்பெல்லாம் கண்ணாய் அவற்றின்று கண்ணிர் பெருகி வெள்ளமாய்ப் பாய்தல் வேண்டும். ஆனால் என் தந்தையே, இச்சிறு நெஞ்சமும் கல்நெஞ்சாகி உருகாது உள்ளது. உலர்ந்த மரக்கட்டையில் செய்த கண்கள் போன்று என் கண்கள் இரண்டும் வறண்டு கிடக்கின்றன. அத்தகைய தீவினையினை உடையேன் யான்' என்கின்றார்.