பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருப்பெருந்துறையில்-திருச்சதகம் 103


 சூடுதல் ஆகியவற்றை மேற்கொண்டு அவனருளில் அழுந்து தலே உயிர்கள் துய்மை பெறுதற்குரிய நெறிமுறையாகும். இதனை

  ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற்
     கன்பிலை என்புருகிப் 
  பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை
     பணிகிலை பாதமலர் 
  சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை
     துணையிலி பிணநெஞ்சே 
  தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை 
     செய்வதொன் றறியேனே (1) 

(பாதமலர் - பாதமாகிய மலர்)

என்பது இப்பதிகத்தின் முதற்பாடல். இங்ஙணம் இறைவனை நினைந்து போற்றும் முகத்தால் நெஞ்சம் தூய்மை பெறும் என்பதும், அத்துய்மைதானும் இறைவனது திருவருளாலேயே உயிர்கள் பெறத்தக்க தென்பதும்,

  நெஞ்சினைத் தூய்மை செய்து
     நினைக்குமா நினைப்பி யாதே
  வஞ்சமே செய்தி யாலோ
     வானவர் தலைவனேநீ (4.23:9)

என்ற நாவுக்கரசரின் திருவாக்காலும் புலனாகும்.


"அறிவிலாத எனைப் புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளி மேல், நெறியெல்லாம் புலமாக்கிய எந்தை" (2) எனவும், "நம் களவறுத்துநின் றாண்டமை கருத்தினுட் கசிந்துணர்ந்திருந்தேயும்...பளக அறுத்து உடையான் கழல் பணிந்திலை" (5) எனவும் வரும் பாடற் பகுதிகள் ஆன்மா சிவனருளால் தூய்மை பெறுதலைச் சுட்டி நிற்பனவாகும் என்பது அறியத்தக்கது.