பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருப்பெருந்துறையில்-திருச்சதகம் 105




  காண லாம்பர மேகட் கிறந்ததோர் 
  வாணி லாப்பொரு ளேஇங்கோர் பார்ப்பெனப் 
  பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப் 
  பூணு மாறறி யேன்புலன் போற்றியே (4)

(வாள்நிலா -மிக்க ஒளி, பார்ப்பு - குஞ்சு, படிறு பொய்; பாழ்நன் - பாணன்)

என்பது நான்காம் பாடல். இதில் முட்டையினை விட்டு வெளியேறும் பறவைக் குஞ்சினைப் போன்று தம் யாக்கைத் தொடர்பினை உதறிவிட்டு இறைவனையே தஞ்சமெனப் பற்றியுய்யும் கருத்துடையராகின்றார் என்பது புலனா கின்றது.

6. அதுபோக சுத்தி;

அதுபோகசுத்தி என்பது, திருவடிப் பேரின்பத்தை ஆருயிர் நுகர்தற் பொருட்டுத் திருவருளால் அவ்வுயிர் தன்னைத் தூய்மைப் படுத்தலாகும். "வலிந்து ஆட் கொண்ட பெருமானை அநுபவிக்க உடல் தடை யாயிருப்பதற்கு இரங்கி, உடற் பற்றால் உண்டாகும் அழுக்கை ஒழித்து,உயிரைத் தூய்மைப் படுத்திக் கொள்ளுதல்" என்பர். இதனாற் போந்த பொருள் அதுபோகத்திற்காக ஆன்மாவைச் சுத்தி செய்தல் என்பதாகின்றது. அடிகள் தமது வாழ்க்கைய நுபவங்களில் நேர்ந்த தவறுகளை எண்ணி உள்ளங் கசிந்து இறைவனைப் போற்றும் முகத்தால் தம் அநுபவங்களைத் தூய்மை செய்து கொள்ளும் பாங்கில் அமைத்துள்ளார். ஆதலால் இப்பதிகம் அதுபோகசுத்தி என்ற பெயர் பெறுகின்றது. அநுபவம் தூய்மையடையவே அதனால் உயிர்க்கு இன்பம் மேலிடுதல் இயல்பாகின்றது. இதனால் சுகமேலீடு என்று பின்னுளோர் கருத்துக்கும் இயைய அமைகின்றது. இப்பதிகத்தில்,