பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 மாணிக்கவாசகர்



உருமாறுகின்றன. அங்குக் கட்டப் பெற்றிருந்த பழைய குதிரைகளைக் கடித்துக் கொன்று அங்கிருந்து புறப்பட்டுக் கடைவீதிகளிலும் மாடம் மாளிகை திருமடம் முதலியவற்றின் முற்றங்களிலும் திரள்திரளாய்ச் சென்று ஊளையிட்டு ஓடுகின்றன. ஊர்ப்பெருமக்கள் விழித்தெழுகின்றனர். பரித்துறைக் காவலரும் இந்தக் கோரக் காட்சியைக் காண் கின்றனர். என்ன விளையுமோ? என்று அஞ்சி மன்னனை அடைகின்றனர் பரித்துறைக் காவலர்கள். ‘மன்னர் பிரானே, நேற்று வந்த புதிய குதிரைகளைக் கண்துயிலாது காத்து வந்தோம். அவை நாங்கள் இட்ட உணவை உட்கொள்ள வில்லை. நள்ளிரவில் நரிகளைப்போல் உருமாறிக் குதிரை, மான், யானைக் கன்று, ஆடு, கோழி முதலியவற்றின் குடல்களைப் பிடுங்கித் தின்று ஊளையிட்டுக் கொண்டு எங்கள் பிடிக்கு அகப்படாமல் ஓடிப்போயின என்று முறையிடுகின்றனர். இதனைச் செவிமடுத்த பாண்டியன் மின்னாமல் இடித்தது போன்ற இத்தகைய துன்பம் நேர்தற்கு எனது அரசு முறையில் ஏதேனும் தவறு நிகழ்ந்ததோ? அருளுடைய பெரியோர்க்கு யான் தீங்கிழைத்தேனோ? என்று மனங் கலங்குகின்றான். அத்தாணி மண்டபத்தை அடைந்து அமைச்சர்களை அழைத்து நள்ளிரவில் நடந்தவற்றைக் கூறுகின்றான். அமைச்சர்கள் மறுமொழி கூற அறியாமல் தலை கவிழ்ந்து நிற்கின்றனர். அடிகள் பொருட்டு இறைவனாற் கொணரப் பெற்ற குதிரைகள் யாவும் அன்றிரவே மீண்டும் நரிகளாக மாறிய செய்தியினை,

  நரியைக் குதிரைப் பரியாக்கி  
     ஞால மெல்லாம் நிகழ்வித்துப் 
  'பெரிய தென்னன் மதுரையெல்லாம்.
      பிச்ச தேற்றும் பெருந்துறையாய்