பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 மாணிக்கவாசகர்



நெடிது வாழ்வாயாக நீ நற்பேறு உடையவன். நினது பொருள் அறத்தின் வழியே ஈட்டப்பட்டதாதலால் அதனை வாதஆரன் வாயிலாக நம் அடியார்கட்காகப் பெற்றுக் கொடுத்தோம். அப்பொருளுக்குத் தக நீ விரும்பிய வண்ணம் குதிரைகளையும் கொண்டுவந்து தந்தோம். அவனைச் சிறை வீடு செய்வதற்காகக் கொற்றாளனாகவும் வந்து மண்சுமந்து பிட்டும் தின்று அடியும் பட்டோம். அவனைச் சிறைவீடு செய்து அவன் விரும்புகின்ற வண்ணம் வாழச் செய்க. இங்ஙனம் செய்வதால் நினக்கே நலம் பெருகும்" என்று வானத்தில் எழுந்த அருள்மொழியினை அங்குள்ளார் அனை வரும் கேட்டு வியப்பெய்தி அரசனை நோக்குகின்றனர்.

விண்ணில் வெளியிட்ட அருள்வாக்கினைக் கேட்ட பாண்டியன் உள்ளத்தில் அச்சமும் உடம்பில் புளகமும் எய்துகின்றான். இது குதிரைச் சேவகனாக வந்த ஆலவாயானின் அருள்வாக்கு எனத் தெளிகின்றான். உடனே அரசன் வாதவூறடிகளை சிறையினின்றும் விடுவித்துத் தன் அருகே இருக்கச் செய்து பலவகை உபசாரங்களைச் செய்கின்றான்; அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்குகின்றான். அடிகளை நோக்கிப் பெரியீர், சொக்கநாதர் நும்பால் வைத்த அன்பினைப் போல் நான் வேறெங்கும் கண்டிலேன். எனது அறியாமையால் நுமக்கு மிக்க இன்னல்களை விளைவித்தேன். அவற்றையெல்லாம் பொறுத்தருளி நுமது திருவுளப்பாங்கின் படி இருப்பீராக’ என அடிகளைத் துதித்துப் போற்று கின்றான். அங்குள்ளார் அனைவரும் வியப்புற்று அடிகளார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி ஆசி பெறுகின்றனர்.

அரசனால் போற்றப்பெற்ற அடிகளார் அரசனை நோக்கி, "மன்னரே, விசும்பில் தோன்றிய மொழியினை இறைவனது அருள்வாக்கு எனத் தெளிந்தீர். நும்மைச் சார்ந்து ஒழுகினமையால், இத்தகைய திருவருட் பேற்றினைப் பெற்றேன்: நீக்குதற்குரிய பிறவித் தொடரையும்