பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160 மாணிக்கவாசகர்



அந்தாதித் தொடையால் ஆனது. கடையனேனை (1) என்று தொடங்கி 'அமுதுண்ணக் கடையவனே' (50) என்று மண்டலித்து முடிகின்றது. நின் திருவடிகட்குத் தொண்டு பட்டு இருக்கும் அடியேனைக் கைவிட்டு விடலாகாது’ என வாதவூரடிகள் ஆண்டவணை நோக்கி வேண்டிக் கொள்ளும் முறையில் அமைந்தமையால் இது 'நீத்தல் விண்ணப்பம்’ என்ற திருப்பெயரைப் பெறுகின்றது. இதன் முதல் இருபது பாடல்களிலும் 48-ஆம் பாடலிலும் உத்தர கோசமங்கைக்கு அரசே! என அடிகள் இறைவனை அழைத்துப் போற்று வதால் இப்பதிகம் திருவுத்தரகோசமங்கையில் அருளிச் செய்யப் பெற்றதென்பது இனிது புலனாகின்றது.

இப்பனுவலுக்கு 'பிரபஞ்ச வைராக்கியம்’ என்பது முன்னோர் வரைந்துள்ள குறிப்பு. இது உலக வாழ்க்கையில் பற்றறுதலாகிய உறுதிப்பாடு என்று பொருள்படுகின்றது. திருப்பெருந்துறையில் இறைவன் அந்தணனாக வந்து அழகமர் திருவுருக்காட்டி ஆண்டருளிய பின்னர், அடிகளார் உலகத் தொடர்பினை அறவே உதறி விடுகின்றார்: இறைவனோடு பிரிவறக் கலத்தலாகிய பேரின்ப நிலையினைத் தலைப்பட்டு இன்புறமுந்துகின்றார். இறைவன் 'இன்னும் சின்னாள் இங்கு இருதி’ எனக் கூறி மறைகின்றார். இந்தப் பிரிவினை சிறுபொழுதும் தரித்திருக்க வொண்ணாமல் உலக வாழ்க்கையில் தமக்குள்ள வெறுப்பும், அவன் திருவடியினைத் தலைப்படுதற்குரிய பேர்ன்பினைப் பெறுதல் வேண்டும் என்னும் பெருவேட்கையும் விளங்க அருளிய பனுவலாதலின் இதற்குப் 'பிரபஞ்ச வைராக்கியம்' என்ற முன்னோர் கருத்துரை பொருத்தமாக அமைகின்றது. ஆண்டவனது திருவடியை அடைதற்குச் சாதனமாக இருப்பது அன்பு: அதன் வியக்கத்தக்க திறத்தினை விளக்குவது திருச்சதகம். அதன் பயனாக உலக வாழ்க்கையின் பற்றொழிவின் உறுதிப் பாட்டினைப் புலப்படுத்துவது நீத்தல் விண்ணப்பம். திருச்