பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற இடங்களில் அருளிச் செயல்கள் 169



புலம்பல் - தனிமையுற்று வருந்துதல். உயிர்களுக்கு இறைவனையன்றித் துணையாவார் ஒருவரும் இலர் எனத் தெளிந்துணர்ந்த மணிவாசகப் பெருமான் குருவாய் வந்து தம்மை ஆட்கொண்டருளிய இறைவனைப் பிரிந்துறைய நேர்ந்த தமது தனிமை நிலைக்கு மிகவும் வருந்துகின்றார். வருந்திய நிலையில் பாடப் பெற்றது. இப்பனுவல். இதற்குச் "சிவானந்த முதிர்வு-சிவானந்தம் பெறாவிச்சை" என்பது பழைய குறிப்பு.

  கரைந்துருகும் பேரன்பு கழலிணைக்கே
     கற்றாவின் மனம்போ லென்றும் 
  திருந்தும்வகை எனக்கருள்க எனக்கேட்டல்
     திருப்புலம் பலாகும்.

என்பது திருப்பெருந்துறைப் புராண விளக்கம். இது திருவாரூரில் அருளிச் செய்யப் பெற்றது என்ற செய்தியினை,

   ஒங்கெயில்சூழ் திருவாரூ ருடையானே 

என்று அடிகள் திருவாரூர்ப் பெருமானை முன்னிலையாக்கிப் போற்றும் திருக்குறிப்பினால் உய்த்துணரலாம்.

இப்பனுவலின்,

  உற்றாரை யான்வேண்டேன்
     ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் 
  கற்றாரை யான்வேண்டேன்
     கற்பனவும் இனியமையும் 
  குற்றாலத் தமர்ந்துறையும்
     கூத்தாவுன் குரைகழற்கே  
  கற்றாவின் மனம்போலக்
     கசிந்துருக வேண்டுவனே. (3) 

(வேண்டேன் - விரும்பேன்; கற்றா - கன்றாடு கூடிய பசு)