பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182 மாணிக்கவாசகர்



ஏற்ற குருதரிசனம் பக்குவம்வந்தபிறகே கிட்டும் என்பது அறியத்தக்கது. வாதவூரடிகள் திருக்கழுக்குன்றத்தினை யடைந்து அங்குக் கோயில் கொண்டிருக்கும் இறைவனை இறைஞ்சிப் போற்றித் திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலில் குருவாக எழுந்தருளியிருந்து மெய்ப்பொருளை உபதேசித் தருளிய குருவடிவத் திருக்கோலத்தை அடியேற்குக் காட்டி யருள்வாயாக’ என வேண்டி நின்றாராக; எம்பெருமானும் அடிகள் விழைந்த வண்ணமே திருப்பெருந்துறையில் தான் கொண்ட திருக்கோலத்தினை அடிகளுக்குக் காட்டியருளினான் என்பதும், அத்திருக்கோலத்தைக் கண்டு மகிழ்ந்த அடிகள் திருக்கழுக்குன்றப் பதிகம் என்னும் இப்பனுவலைப் பாடிப் போற்றினார் என்பதும் வரலாறு. இச்செய்தி,

  நீதிமறை பரவுதிருப் பெருந்துறையில் 
     குருவடிவாய்த் திகழ்ந்த கோலம் 
  காதலொடுங் காட்டினையே யெனும்களிப்புப்
     பகர்தல் திருக்கழுக் குன்றமாமே 

என வரும் திருப்பெருந்துறைப் புராணத்தால் இனிது புலனாகும், தவிர, இப்பதிகப் பாடல்தோறும் பெருந்துறைப் பெருமானை முன்னிலைப் படுத்தி திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே எனஅடிகள் மனம் நைந்துருகிப் போற்றுதலாலும் அறியப்படுகின்றது.

இப்பதிகத்தில்,

  பிணக்கி லாதபெ ருந்து றைப்புெரு 
     மானுன் னாமங்கள் பேசுவார்க் 
  கிணக்கி லாததோ ரின்ப மேவருங்
     துன்பு மேதுடைத் தெம்பிரான் 
  உணக்கி லாததோர் வித்து மேல்விளை
     யாம லென்வினை யொத்தபின் 
  கணக்கி லாத்திருக் கோல நீ வந்து 
     காட்டி னாய்கழுக் குன்றிலே(1)