பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை அருளிச் செயல்கள் 185



'திருவெம்பாவை’ என்னும் பனுவலைப் பாடியருளுகின்றார். இவ்வாறு கூறுவர் திருவாதவூரடிகள் புராண ஆசிரியர் கடவுண் மாமுனிவர்.

37. திருவெம்பாவை (7)

இப்பனுவல் இருபது பாடல் களையுடையது. இப்பாடல்கள் யாவும் மகளிர் ஒருவரை யொருவர் "எம்பாவாய்" என அழைத்துக் கூறும் முறையில் அமைந்திருத்தலால் திருவெம்பாவை’ என்பது இதற்குரிய பெயராகின்றது. மகளிர் ஒருவரையொருவர் துயிலுணர்த்தி அழைத்து நீராடி இறைவனைப் போற்றும் முறையில் அமைந்த இப்பனுவலைப் பாவைப் பாட்டு என வழங்குவர் பேராசிரியர். 2 பெரும்பற்றப் புலியூர் நம்பியும் "திருந்து பூவல்லி யுந்தி தோணோக்கம் சிறந்த பாவை’ என இத்திருவெம் பாவையைப் பாவை என்ற பெயராலேயே குறித்துள்ளார்.3 திருமாலடியாராகிய அன்னை ஆண்டாள் அருளிய பனுவல் திருப்பாவை’ என வழங்கப்பெறுதல் இப்பழைய வழக்கினை நினைவுபடுத்துவதாகும்.

'திருவெம்பாவை’ என்ற தொடர் திரு+எம்-பாவை எனப் பிரிந்து விளங்கும். திரு-தெய்வத்தன்மை: எம்உயிர்த் தன்மை; பாவை - வழிபாட்டிற்கு அமைந்த திருவுருத் தன்மை. எனவே, தெய்வத் தன்மை வாய்ந்த திருவருள் (பார்வதி தேவி) மகளிரை இயைந்து இயக்குவதோடு அவர்கட்குத் துணை நாடித்தரற்கு அவர்கள் அதுட்டிக்கும் நோன்பினைப் பாவைத் திருவுருவில் நின்று ஏற்றுப் பயனளிக்கின்றாள் என்பது திருவெம்பாவை"யின் திரண்ட பொருள் என்று கொள்ளலாம். இத்தகைய நலம் வாய்ந்த இத்திருத்


2. தொல். செய்யு.149ஆம் நூற்பாவின் உரை காண்க. 3. திருவெம்பாவை திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பெற்றதாகக் கருதுவர் பெரும்பற்றப் புலியூர் நம்பி.