பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை அருளிச் செயல்கள் 187



திருவெம்பாவையில் முதல் எட்டுத் திருப்பாட்டுகளும் 5 முதல் 12 வரை அகவையுள்ள கன்னிப்பெண்கள் ஒருவரை யொருவர் எழுப்புவதைக் குறிக்கின்றன. ஆண்டவன் நினைவுடன் செய்யும் எதுவும் ஆண்டவன் திருத்தொண்டேயாகும். அஃது அவன் பண்புமாகும். அதனால் எண் பேராற்றலையும் எண்குணத்தினையும் குறிப்பவையுமாகும். 9-ஆம் பாடல் அருவமும், 10-ஆம் பாடல் அருவுருவமும், 11-ஆம் பாடல் உருவமும் குறிப்பனவாகும். 12-ஆம் பாடல் முத்தொழிலைக் குறிப்பது. 13-ஆம் பாடல் அம்மையப்பராய்-தையல் பாகராய்-ஒரு திருமேனியில் மருவும் திருவுருவமும், சிவதீக்கையும் குறிப்பது. 14,15- ஆம் பாடல்கள் முறையே மறைப்பும், அருளலும் குறிப்பன.16-ஆம்பாடல் அருளொப்பும் பொதுப்பயனும் குறிப்பது. 17-ஆம் பாடல் பேரின்பம் குறிப்பது. 18-ஆம் பாடல் திருவடியினைக் குறிப்பது. 19-ஆம் பாடல் சிறப்புப் பயன் குறிப்பது. 20-ஆம் பாடல் ஐந்தொழில் முதல்வனே அனைத்துக் காவலன் என்பதைக் குறிப்பது. இத்திருவெம்பாவை வாழ்க அந்தணர் (3.54) என சீகாழித் துரையால் அருளிச்செய்யப்பெற்ற திருப்பாசுரம் போல் தனிச்சிறப்பு வாய்ந்தது என்று சொல்லலாம்.

மக்களுக்குரிய ஓராண்டு வானோர்க்கு ஒருநாள் ஆடி முதல் மார்கழி முடியவுள்ள ஆறு திங்களும் இரவு, தை முதல் ஆனி முடிய ஆறு திங்களும் பகல். இவ்வகையில் மார்கழித் திங்கள் வானோர்க்கு வைகறைப் பொழுதாகக் கருதப் பெறுகின்றது, கூத்தப் பெருமான் திருவுருவில் திகழும் திருவாதிரை நிறைமதியுடன் கூடி விளங்கும் சிறப்புடைய திருநாளாக அமைவது மார்கழித் திங்களில் ஆதலின், மார்கழித் திருவாதிரைத் திருநாள் சிவபெருமானுக்கு உரிய திருநாளாகக் கொண்டாடப்பெறுகின்றது. மார்கழித் திருவாதிரையில் தொடங்கி தைத்திங்களில் நிறைவுபெறும்