பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192 மாணிக்கவாசகர்



முறையில் வாதவூரடிகள் இத்திருவெம்பாவையை அருளிச் செய்துள்ளார். இப்பிரபந்தத்தில் இளமகளிர் தம்தோழியர் பால் வைத்த அன்பும் இறைவன் திருவடிகளில் தாம் வைத்துள்ள பக்தித் திறமும் வளர ஒருவரை யொருவர் துயிலுணர்த்தும் முறையும் தெளிவாக விளக்கப் பெற்றுள்ளன. நகைச்சுவை பொருந்த உரையாடும் நிலையிலும் இறைவன்பாற் கொண்ட அன்பின் திறமே மேம்பட இனிமையாகப் பேசும் மொழித்திறமும். பொழுது புலர்வதற்கு முன் பூத்திகழும் பொய்கையில் குடைந்தாடி அண்ணாமலை யான் அடிக்கமலம் சென்றிறைஞ்சி அம் முதல்வனைப் பண்ணார் தமிழால் பாடிப் போற்றும் பாங்கும், உலகம் வெயிலாலும் பனியாலும் வெம்பாது நலம்பெற வேண்டி உலகம் ஈன்ற அன்னையாகிய இறைவியின் திருவருளே என்ன மழையைப் பெய்யப் பணிக்கும் மனவளமும், இறைவன்பால் அன்புடையவரையே தாம் கணவராகப் பெறுதல் வேண்டும் எனத் தம் மணவாழ்க்கை குறித்து இறைவனைப் போற்றும் மனத்திட்பமும், மன்னுயிர்கள் உய்தற்பொருட்டு ஐந்தொழில் திருக்கூத்தியற்றும் இறைவனது அருளியல்பினைப் போற்றி அம்மகளிர் தாம் மேற்கொண்ட நோன்பினை நிறைவு செய்து கொள்ளும் முறையும் இப்பனுவலில் நன்கு விளக்கம் அடைகின்றன. -

இரண்டு பாவைகளிலுமுள்ள பொதுக் கருத்துகள்

திருவெம்பாவை. திருப்பாவை ஆகிய இரண்டு பனுவல்களும் வெவ்வேறு தெய்வ வழிபாடுடையாருக்கு உரியவைகளாக இருந்தபோதிலும், இரண்டும் ஒரே பொதுக்குறிப்பு உடையவைகளாக இருப்பது நாம் கவனித்தறிய வேண்டியது ஒன்று. இக்குறிப்புகள் யாவை என்பதை இனிக் காண்போம். முதலாவதாக : இரண்டு பனுவல்களிலும் உள்ள பாடல் களை மேம்போக்காக நோக்கும்பொழுதே ஒவ்வொரு பாடலும் எம்பாவாய்' என்று முடிந்து நிற்பதை அறியலாம்.