பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை அருளிச் செயல்கள் 199


 தோன்றுவதும், ஆண்பக்தரின்முன் கடவுளின் உருவம் பெண் பாலாகத் தோன்றுவதும் சிந்தித்து மகிழ்வதற்குரிய செய்தி யாகும்.

கடலில் நீர் முகந்து கொண்டு வானத்தில் பரவிக்கிடக்கும் கார்மேகத்தின் காட்சி நீல நிறத்தையுடைய அம்மையின் திருமேனியை நினைவு படுத்துகின்றது. மேகங்களுக்கிடையே தோன்றிப் பொலியும் மின்வெட்டு தேவியின் சிறிய இடையை நினைவூட்டுகின்றது. மின்னல் தோன்றிச் சற்று நேரத்திற்குப் பிறகு கேட்கப் பெறும் இடிமுழக்கம், பிராட்டி யின் திருவடியில் அணிந்துள்ள சிலம்பின் ஒலிபோல் உள்ளது. வானத்தில் காட்சியளிக்கும் வானவில் அம்மையின் திருப் புருவத்தை நினைவிற்குக் கொண்டு வருகின்றது. மேகத்தினின்று பொழியும் மழையோ அடியவர்களிடம் சுரக்கும் ஆண்டவன் அருள்போல் காட்சியளிக்கின்றது. ஆகவே, திருப்பாவை திருவெம்பாவை ஆகிய இரண்டு பக்திப் பனுவல்களும் சமய வேறுபாடுகளால் சில ஐதிகங்களில் மாறுபட்டாலும் தேவிநோன்பு போன்ற வழி பாட்டிலும், வழிபாட்டின் குறிக்கோள்களிலும் ஒன்று பட்டே உள்ளன. இந்த இரண்டு இசைத் தமிழ்ச் செல்வங்களும் தமிழ் இலக்கியப் பூங்காவை அழகு செய்து நிற்கும் வாடான் கவிதைப் பூந்துணர்களாகமிளிர்கின்றன. இரண்டிலுமுள்ள பாடல்களில் நகைச்சுவையோடு ஒருவித நாடகத் தன்மையும் ஒசையின்பமும் ஏற்றதொரு முறையில் கலந்து இன்ப மணம் கமழ்கின்றது. அடிக்கடி மழையின்றி எம் மருங்கும் பஞ்சம் தலைவிரித்தாடும் இக்காலத்தில் பண்டைத் தமிழ்ப் பெண்மணிகளைப் போவே இன்றைத் தமிழ்ப் பெண்களும் மார்கழியில் பாவை நோன்பு நோற்று மழை வரம் பெறவேண்டியது அவர்களுடைய தலையாய கடமையாகும். "பெய் எனப் பெய்யும் மழை" என்பதுதானே