பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208 மாணிக்கவாசகர்



அபயக் கை காத்தல் தொழிலைக் குறிக்கும். இனி இடப் புறத்துக் கைகள் இரண்டினுள் மேலே எடுத்த கை தீயினைத் தாங்கியுள்ளது. அத் தீ உலகங்கள் எல்லாவற்றையும் அழித்தலைக் குறிக்கும். வலப்பக்கத்துத் திருவடியின்கீழ் முயலகன் என்ற முரடன் அழுத்தப் பெற்றிருப்பது உயிர்கள் வினைப்பயன்களை அநுபவத்தற் பொருட்டு இறைவன் செய்யும் மறைப்புத் தொழிலைக் குறிக்கும். தூக்கிய திருவடியாகிய இடது திருவடியினை இடது திருக்கரத்தால் காட்டி நிற்கும் அமைப்பு, இறைவன் எடுத்த பாதத்தால் உயிர்களுக்குப் பேரின்பத்தை நுகர்விக்கும் அருளல் தொழிலைக் குறிப்பதாகும். இவ்வாறு அம்பலவாணன் செய்தருளும் திருக்கூத்து ஐந்தொழில்களையும் ஒருங்கே நிகழ்த்தவல்லது என்ற நுட்பத்தை உமாபதி சிவம்,

  தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில் 
  சாற்றிடும் அங்கியிலே சங்காரம்-ஊற்றமாய் 
  ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோதம் முத்தி 
  நான்ற மலர்ப்பதத்தே நாடு   2

என்ற வெண்பாவால் விளக்குவர்.

இதயமாகிய மன்றத்தில் இறைவன் ஆன்ம ஈடேற்றத்துக்கு அருள் நடனமாடும் பாவனையில் தூல சின்னமாக இருப்பது திருச்சிசிற்றம்பலம். இதன் அமைப்பு வேதங்கள், ஆகமங்கள், சைவ சித்தாந்த தத்துவங்கள் ஆகியவற்றை விளக்கும்முறையில் உள்ளன. பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் - இவர்கட்கென ஐந்து பீடங்கள் உள்ளன. ஐந்தெழுத்து மந்திரத்திற்கு அறிகுறியாக ஐந்து படிகள் உள்ளன. இவற்றிற்குப் பக்கத்திலுள்ள கதவின் பெயர் ஆவரணம்; சித்தாந்தத்தில் இதனை அவித்தை என்பர். தொண்ணுாற்றாறு தத்துவங்களும் பலகணிகளாக


2. உண்மை விளக்கம்-36