பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பும் வளர்ப்பும் 5




சிவபெருமானை வழிபட்டிருக்க சிவபெருமானும் ஓர் அந்தணர் வடிவில் அங்கு எழுந்தருளி ஆகமப் பொருளை உபதேசிக்கின்றார்.


இந்நிலையில் இந்திரன் பலவித அணிநலங்களுடன் உலா வருகின்றான். கணநாதர்களில் ஒருவர் உலாக்காட்சியில் கருத்தைச் செலுத்தி உபதேசத்தில் கவனமின்றி இருக்கின்றார். இதனால் அவரைப் பூவுலகில் பிறந்து விரும்பிய செல்வமெல்லாம் எய்தப் பெற்றுப் பின்னர்த் தம்மை அடையுமாறு பணிக்கின்றார் பரமன். தாமும் ஒரு குருவாக எழுந்தருளி அவரை ஆட்கொள்வதாகவும் தேற்றுகின்றார். இந்தக் கணநாதரே திருவாதவூரில் சம்புபாதாசிருதருக்கும். சிவஞானவதியார்க்கும் சற்புத்திரனாகப் பிறந்தருளுகின்றார்.


திருவுத்தர கோசமங்கைப் புராணத்தில் மாணிக்கவாசகரின் முன்னைய பிறப்பின் வரலாறு குறிப்பிடப்பெறுகின்றது. திருவுத்தர கோசமங்கைத் திருக்கோயிலின் தென் மேற்குத் திசையில் முற்றுணர்வுடைய முனிவர் ஆயிரவர் சிவபெருமானை நோக்கித் தவம் புரிகின்றனர். இறைவன் அவர்கட்கு முன்தோன்றி, "நாம் மண்டோதரிக்கு அருள் செய்தற் பொருட்டுத் தென்னிலங்கை செல்லுகின்றோம். நீவிர் இவ்விடத்திலேயே இருமின்" என்று கூறி தம்மிடத்திலிருந்த அரும்பெரும் நூலாகிய திருமுறையை முனிவர்களிடம் தந்தருள்கின்றார். முனிவர்கள் இறைவனை நோக்கி “தாங்கள் இரக்கம் என்ற ஒன்று இல்லா அரக்கர்கள் வாழும் இடத்திற்குச் செல்லுதல் தகுமா?" என்று வினவுகின்றனர். அதற்கு இறைவன், "இராவணன் நம் திருமேனியைத் தீண்டும் பொழுது இங்குள்ள பொய்கையின் நடுவே ஒரு தீப்பிழம்பு தோன்றும்" என்று கூறி இலங்கை செல்லுகின்றார். அங்கு மண்டோதரியின் மாளிகைக்கு இராவணன் வருகின்றான் சிவபெருமான் இளங்குழவியாக உருமாறுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/23&oldid=1012147" இலிருந்து மீள்விக்கப்பட்டது